ஜுலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் நீண்ட நாள் விடுமுறையுடன் பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து பஸ் சேவை ஆகக் கூடுதலான பஸ்களை இதற்காக சேவையில் ஈடுபடுத்தும் என்றும் இதேபோன்று தனியார் துறையினரும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர்.

சுமார் 600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன், தேவைக்கு அமைவாக பயண சேவைகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்து. எந்தவித வருமானத்தையும் எதிர்பார்க்காமல் சேவைகள் முன்னெடுக்கப்படும்.

இதேபோன்ற ரயில் சேவைகளையும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, வெலிஹத்த வரையில் மேலதிக ரயில் சேவைகளை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் மீண்டும் தொழிலுக்காக வருவதற்கு இந்த பஸ் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.