(க.பிரசன்னா)

பாராளுமன்றம் இல்லாத சூழ்நிலையில் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் எதேச்சதிகாரமாக பல விடயங்களை முன்னெடுத்து வருவதாகவும், எனவே எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டுமென இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் பொதுச்செயலாளர் இ.தம்பையா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 2015 – 2019 ஆண்டுவரை ஓரளவுக்கு ஜனநாயக இடைவெளி காணப்பட்டது. அதனை பாதுகாப்பதற்கு கட்சிகள் தவறியிருந்தன. கடந்த 6 மாதங்களில் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. வட-கிழக்கில் நியமிக்கப்பட்டுள்ள செயலணிகள் முற்றுமுழுதாக சிங்களமயமாக காணப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்திகளைத் தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு தேவையென்ற வகையில் ஜனாதிபதியின் கருத்து அமைந்திருக்கின்றது.

இன்று அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே வடகிழக்கு மட்ட்டுமல்லாது  சகல இடங்களிலும் இராணுவமயமாக்கம் இடம்பெறுகின்றது. மக்களிடையே இன,மதவாதங்களை தூண்டுகின்ற வகையில் பிரசாரங்களை முன்னெடுத்து ஆட்சி அமைப்பதற்கான பின்புலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்திலேயே நாம் தேர்தலை சந்திக்கின்றோம். இத்தேர்தலில் மக்கள் எவ்வாறு முடிவு எடுக்க வேண்டும் என்பதில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகின்றது. அதனாலேயே நாங்கள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த ஜனநாயக மறுப்புக்கு முகம் கொடுப்பதற்கு கட்சிகள் தயாரில்லை. ஜனாதிபதியின் ஆட்சியின் பின்னர் அக்கட்சியின் பிரதமர் மூன்று முக்கியமான விடயங்களை முன்வைத்து வருகின்றார். 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்குவது, 19 ஆவது சீர்த்திருத்தத்தை இல்லாமலாக்குவது, சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்குவது என்பவற்றை இல்லாமலாக்குவதற்கே ஆணை கோருகின்றார்கள். இது நாட்டில் இருக்கும் எஞ்சிய ஜனநாயகத்தை இல்லாமலாக்கும் செயற்பாடாகும். அதன் பின்புலத்தில் ஜனநாயக மறுப்பு காண்பிக்கப்படுவதே எமக்கு எச்சரிக்கை சமிக்ஞையாகும்.

எனவே அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகவுள்ள ஜனநாய எதிர சக்திகளான, விரோதிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தடுத்த நிறுத்தவேண்டுமென்றால் போட்டியிடுகின்ற கட்சிகளில் ஓரளவு ஜனநாயகத் தன்மையுள்ள, வெற்றிவாய்ப்புள்ள கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் அதைசெய்ய முடியும் என தெரிவித்திருந்தார்.