(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆளும் அரசாங்கம் பொதுத் தேர்தலில் 137 ஆசனங்களை பெற்றுக்கொள்வது உறுதியாகும். அதனால் சிறுபான்மை மக்கள் இனவாத, சிறிய கட்சிகளுக்கு பின்னால் சென்று ஏமாறாமல் வெற்றியின் பங்காளிகளாக மாறவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் உறுப்பினருமான அலிசப்ரி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு நிகழ்வு கொழும்பு மருதானையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜகாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் தலைமைத்துவத்தில் நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றத்தினால் மக்களுக்கு  அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ்வைப்பற்றி பிழையான கருத்துக்களை எதிர்க்கட்சியினர் தெரிவித்து தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் அவர்களின் பொய் பிரசாரம் இந்தமுறை இந்த மக்களிடம் எடுபடுவதில்லை.

குறிப்பாக கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானால் முஸ்லிம் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் , முஸ்லிம்களின் வியாபார  நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போன்ற குற்றச்சாட்டுக்களை பிரசாரம் செய்துவந்தனர். முஸ்லிம் தலைவர்கள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களும் இதனை பிரசாரம் செய்துவந்தனர். ஆனால் முஸ்லிம் மக்கள் இந்த தேர்தலில் முஸ்லிம் தலைவர்கள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த பாடத்தை புகட்டுவார்கள்.

அத்துடன் முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்ய முஸ்லிம் தலைவர் ஒருவர்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. கடந்த பாராளுமன்றத்தில் 21முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் எதனையும் செய்யவில்லை. மாறாக அவர்களால்  பிரச்சினை அதிகரித்திருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ஷ் சிறந்த  தலைமைத்துவத்தை வழங்கி அனைத்து இன மக்களையும்  சமமாக கவனித்து வருகின்றார். 

அதேபோன்று பலஸ்தீன் மக்களின் உரிமைகளை மதித்து, இஸ்ரேல் தூதரகம் அமைக்க எமது நாட்டில் காணிவழங்குவதில்லை என அரசாங்கம் உறுதியாக தெரிவித்திருக்கின்றது. அத்துடன் காெரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களையும் சமமாக கருதி அவர்களுக்கு சிகிச்சை அளித்து சுகம்பெறச்செய்ய தேவையான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றார்.

எனவே சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் இனவாத, சிறிய கட்சிகளுக்கு பின்னால் சென்று நாட்டை இன, மதவாத திசைக்கு எடுத்துச்செல்ல இடமளிக்கவேண்டாம். இந்த தேர்தலில் அரசாங்கம் 137 ஆசனங்களை பெற்றுக்கொள்வது உறுதியாகும். அதனால் அந்த வெற்றியின் பங்காளிகளாக சிறுபான்மை மக்களும் மாறவேண்டும் என்றார்.