பி.மாணிக்கவாசகம்

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பற்றிய அபாய நிலைமைக்கு மத்தியிலும் தேர்தல் களம் பிரசார நடவடிக்கைகளில் சூடு பிடித்திருக்கின்றது. சிங்கள பௌத்த மக்களின் பேராதரவில் கூடிய நம்பிக்கையைக் கொண்டுள்ள ராஜபக்ஷக்களின் கட்சியாகிய பொதுஜன பெரமுன இந்தத் தேர்தலில் முன்னணியில் நிற்கின்றது.

Daily Mirror - SJB launched…

ஐக்கிய தேசிய கட்சியும் அதில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாசாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் இந்தத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெறுவதற்காகத் தீவிரப் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றன. இதில் சஜித் பிரேமதாசா சிறுபான்மை இன கட்சிகள் பலவற்றைத் தன்னுடன் கூட்டுச் சேர்த்துத் தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சியைப் போலவே தனது சுயத்தை இழந்த நிலையில் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஓர் அக்கினிப் பிரவேசமாகவே தெரிகின்றது.

வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முன்னணி அரசியல் கூட்டணியாகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இந்தத் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொண்டிருப்பதைக் களநிலைமைகள் காட்டுகின்றன. மாற்றுத் தலைமையொன்று அவசியம் என்ற தமிழ் அரசியல் பரப்பின் தேவைப்பாடே தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது.

பங்காளிக் கட்சிகளுடன் இறுக்கமான அரசியல் உறவைக் கொண்டதாகவும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் பாத்திரமானதாகவும் கூட்டுக் கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, கட்டமைப்பதற்கு, அதன் தலைமை தவறிவிட்டது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது.

அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதேவேளை, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றில் சர்வதேசம் குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவை தீவிரமாகச் செயற்பட்டிருந்த போதிலும், அதனைப் பயன்படுத்தி அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து பொறுப்பு கூறுகின்ற செயற்பாட்டில் முன்னேற்றத்தைக் காண தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது.

இந்த விடயத்தில் நீதிக்காகவும் பிரச்சினைகளின் தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் நலன்களிலும் பார்க்க அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஐநா மனித உரிமைப் பேரவையில் கால நீடிப்பைப் பெற்றுக்கொடுப்பதில்தான் கூட்டமைப்பு கூடிய கரிசனையுடன் செயற்பட்டது.

தமிழ்த்தரப்பு அரசியல் நிலைமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறுதல், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி பெற்று தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும், அந்தப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையை வழங்கி உரிய முறையில் அவற்றைக் கையாள்வதற்குக் கூட்டமைப்பு தவறிவிட்டது, என்பது போன்ற பல விடயங்களில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள்.

ரணிலுக்கே ஆதரவு… கூட்டமைப்பு நேற்று ...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்தியை மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமாகிய விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கியுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மாகாண அமைச்சருமாகிய அனந்தி சசிதரன் ஆகியோர் பயன்படுத்த முனைந்திருக்கின்றனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ...

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இந்தத் தேர்தலின் ஊடாக ஒரு மாற்று அரசியல் தலைமையாக உருவாகுவதற்கான முனைப்பைக் கொண்டிருக்கின்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்தும் தனித்தும் தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, வடமாகாணத்தில் பல சுயேச்சை குழுக்களும், பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜேவிபி போன்ற பிரதான கட்சிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த சில சிறிய கட்சிகளும் தமிழ் மற்றும் சிங்கள வேட்பாளர்களைக் களமிறக்கி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு முன் வந்திருக்கின்றன.

இத்தகையதோர் அரசியல் பின்னணியிலேயே தமிழ் மக்கள் பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல் பரப்பில் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மை, சுதந்திரமான சமஸ்டி ஆட்சி அதிகாரம் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பொதுவில் கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைத் தாங்களே கொண்டிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கிடையிலான அரசியல் போட்டி மிகத் தீவிரமாக முனைப்பு பெற்றிருக்கின்றது. இதனால்தான் அடிப்படையில் ஒரே கொள்கையைக் கொண்டிருந்தாலும்கூட அவர்களால் ஒன்றிணைந்து ஓர் அணியாகச் செயற்பட முடியவில்லை. தேர்தலில் போட்டியிடவும் முடியவில்லை.

 இந்த அரசியல் அதிகாரப் போட்டி அல்லது அரசியல் தலைமைக்கான தன்முனைப்பு நிலை என்பன தமிழ்க்கட்சிகளை ஓர் அணியில் ஒன்றிணைய விடாமல் தடுத்திருக்கின்றது. இதுவே தமிழ்த்தரப்பு அரசியலின் யதார்த்தம். அதுவே தமிழ் மக்களின் அரசியல் பலவீனமாகவும் பரிணமித்திருக்கின்றது.

திருவிழா தேர்தல் அல்ல

பொதுவாகத் தேர்தல் என்றாலே அது ஓர் அரசியல் திருவிழாவாகவே அமைந்திருக்கும். ஆட்டமும் கோஷங்களும் கொண்டாட்டங்களாகவே இடம்பெறும். மக்களைக் கவர்ந்து இழுக்கின்ற கவர்ச்சிகரமான சுவை உணர்வு மிகுந்த மேடைப் பேச்சுக்களும், சொல் அலங்கார உரைகளும், மாற்றுக் கட்சிகள் பற்றிய வேடிக்கையான வர்ணனைகள், சாடல்கள் என்று மேடைப் பேச்சுக்களும் களைகட்டி இருக்கும்.

உண்மையில் அரசியல் கட்சிகள் சமபலம் கொண்ட சாதாரண அரசியல் சூழலில்தான் இந்த நிலைமை. ஆனால் இப்போதைய நாட்டின் அரசியல் நிலைமை சாதாரண நிலைமையல்ல. தென் பகுதியில் பொதுஜன பெரமுனவுக்கு வேண்டுமானால் சாதாரண அரசியல் நிலைமையாக இருக்கலாம். ஏனெனில் சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக அந்தக் கட்சி வளர்ச்சி பெற்றிருக்கின்றது. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி இருக்கின்றது. அதற்கும் மேலாக அந்த மக்களைத் தங்களது அரசியல் போக்கிற்கும், அரசியல் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் கவர்ந்து தன்வசப்படுத்தி இருக்கின்றது.

அத்தகைய நிலைமையில் ஏனைய தென்னிலங்கைக் கட்சிகள் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி உடைந்து போயிருக்கின்றன. மக்கள் மத்தியில் தங்களுடைய முன்னைய செல்வாக்கு நிலைமையில் இருந்து சரிவடைந்திருக்கின்றன. ஜேவிபியினர் அந்த நிலைமைக்கு ஆளாகாத போதிலும், அவர்களுடைய அரசியல் இன்னும் தேக்கநிலையிலேயே காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவுடன் ஒப்பிடுகையில் ஜேவிபி வளர்ச்சி குன்றிய நிலைமையிலேயே காணப்படுகின்றது.

இந்த நிலைமையைவிட தமிழ்த் தரப்பு அரசியல் நிலைமைகள் தீவிரமடைந்திருக்கின்றன. பல்வேறு பிரச்சினைகளுக்குத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முகம் கொடுத்து வருகின்றார்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க யுத்த மோதல்களின் போது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் உரிய நியாயமும் நீதியும் கிடைக்காமல் அவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கான அவர்களுடைய அரசியல் ஏக்கம் சமூக ஏக்கமாக மாறி இருக்கின்றது.

பேரினவாத ஆட்சியாளர்களின் இன, மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் ரீதியான பாதிப்பில் இருந்து அது சமூக மட்டத்திலான பாதிப்பாக விரிவடைந்திருக்கின்றது. இதனால், தமது தாயகப் பிரதேசத்தைப் படிப்படியாக இழந்து வருகின்ற அவர்கள் இன, மத, இராணுவ ரீதியிலான மும்முனை நெருக்கடிகளுக்கும் ஆளாகி உள்ளார்கள். இதனால் அவர்களுடைய இருப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கேள்விக்குறிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலையில் இந்தத் தேர்தல் அவர்களுக்கு திருவிழா தேர்தலாக அமையவில்லை. மாறாக வரலாற்று ரீதியான தங்களுடைய பூர்வீக இருப்பிடப் பிரதேசங்களைக் கபளீகரம் செய்வதற்காக நீண்டுள்ள அரசியல் கரங்களின் பிடியில் இருந்து எவ்வாறு தப்புவது என்பது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், இந்தத் தேர்தலானது அரசியலையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது. தேசிய மட்டத்திலான தேர்தல் அரசியல் தமிழ்த் தரப்பு அரசியலைப் போலல்லாமல், பொருளாதார அபிவிருத்தியையே குறி வைத்திருக்கின்றது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய எதிர்கால வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு இந்தத் தேர்தல் தள்ளப்பட்டிருக்கின்றது.

இதனால் தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களுக்கு இது அபிவிருத்தி அரசியல் சார்ந்த தேர்தலாகவும், தமிழ் மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தியையும் அதேவேளை, அரசியல் உரிமையையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது.

முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டம் ஒன்றில் மூழ்கியிருந்த தமிழ் மக்கள் பொருளாதாரத்திலும், பிரதேச அபிவிருத்தியிலும் மிக மோசமாகப் பின்தள்ளப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிவுக்கு வந்து பதினொரு வருடங்கள் கழிந்தவிட்ட போதிலும், யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து அவர்கள் நிலைபேறான மீட்சி பெறவில்லை.

யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தன. பாதிப்புகளுக்கு உள்ளாகிய பிரதேச மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிலும்பார்க்க, யுத்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் மீள் கட்டமைப்புப் பணிகள் யாவும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களின் வர்க்க ரீதியான தொழில் முறை நலன்களிலேயே அரசு அக்கறையும் தீவிர கவனமும் செலுத்தி இருந்தது.

இதனால் யுத்தப் பாதிப்புக்களில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீட்சி பெறாத நிலைமையே தொடர்கின்றது. பொருளாதார அபிவிருத்தி என்ற உலக ஒழுங்கைப் பின்பற்றி இலங்கை அரசும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான வேலைத் திட்டங்களிலும், அரசியல் போக்கிலுமே தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்தப் பொதுவான செயல்வழித் தடத்தில் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விசேட அரசியல் உரிமைசார்ந்த தேவைகளில் கவனம் கொள்ளவில்லை.

இதனை அடியொட்டியே தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது. ஆகவே அரசியல் தீர்வில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசியல் நலன்களுக்காக தமிழ் அரசியல்வாதிகளே அரசியல் உரிமை குறித்து அலட்டுகின்றார்கள் என்ற ரீதியில் பேரினவாதிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.  

இத்தகைய பின்புலத்தில் தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதிநிதிகளையும், அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர வல்ல ஆளுமையுள்ள அரசியல் தர்லைவர்களையும் இந்தத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்களும், தமிழ் மக்களால் அறியப்பட்டவர்களுமாகிய அரசியல் தலைவர்களும் கட்சித் தலைவர்களும் பொருளாதார அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் இணைந்த கொள்கைகளை தமது தேர்தல் இலக்காக வெளிப்படுத்தி உள்ளார்கள். அதேவேளை, தென்னிலங்கைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களை தமது தேர்தல் இலக்காக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதிநிதிகளையா அல்லது பொருளாதார அபிவிருத்திக்கும், அரசியல் உரிமைக்குமான அரசியல் தலைவர்களையா யாரைத் தெரிவு செய்வது என்ற கேள்வி தமிழ் மக்களின் முன்னால் விசுவரூபம் எடுத்துள்ளது.

அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தேர்தலின் பின்பே தெரியவரும்.