(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய 102 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சி செயற்குழு எடுத்த தீர்மானத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்  கட்சிக்கு உண்டு. என்பதை உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்  தெரிந்துக் கொள்ள வேண்டும்  என ஐக்கிய தேசிச கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறியவர்களின் கட்சி உறுப்புரிமையினை இரத்து செய்வதற்கு  கட்சியின் செயற்குழு  எடுத்த தீர்மானத்தை  சவாலுக்குட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச்செயலாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.   

இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடான தன்மையில்  காணப்பட்டதால் நீதிமன்றம் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே இரத்து செய்தது. கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக  செயற்பட்டவர்களுக்கு  எதிராக இதுவரையில்  கட்சியின் யாப்புக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின்  கொள்கைக்கு  எதிரானவர்களுக்கு எடுத்த தீர்மானத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை  ஐக்கியதேசிய கட்சியின்  உள்ளுராட்சிமன்ற  சபை  உறுப்பினர்கள்,   ஒரு  படிப்பினையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி ஒன்று தோற்றம்பெறும் போது    பின்பற்ற வேண்டிய  வழிமுறைகள்  எதனையும்   ஐக்கிய மக்கள் சக்தியினர்    செயற்படுத்தவில்லை. ஆகவே அத்தர்ப்பினரை நம்புவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

 வீழ்ச்சியடைந்துள்ள  பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே  சீர்செய்ய முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2014ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தயே எம்மிடமும் கையளித்தார். பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே ஜனாதிபதி  தேர்தல் இரண்டு  வருடத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது.   சர்வதேச  நாடுகளின்  நல்லுறவை  எம்மால் மாத்திரமே   பெற முடியும் என்றார்.