தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளது. தென்னிலங்கை தமிழர் தரப்பு எதனைக்கூறினாலும் பிரிவினைவாதத்தைக் கோருகின்றாரகள் என்றே பார்க்கின்றார்கள்.

இதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூறிவரும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இது அவர்களின் தேர்தலுக்கானது தென்னிலங்கையில் வழமையாகவே இந்தச் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இதனை நான் முக்கியமாகக் கருதவில்லை தமிழர் தரப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சொல்லுகின்ற கருத்துக்களை பிரிவினை வாதத்தை மையப்படுத்தியதாகவே அவருடைய கருத்துக்கள் இருக்கின்றன. 

எங்களுக்கு இது பிரச்சினை அல்ல. எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பாக கடந்த அறுபது எழுபது வருட காலமாக தமிழரசுக்கட்சி, அதற்குப் பின்னரான இயக்கங்கள் கூட தேர்தல் களங்களில் நின்ற இயக்கங்கள் கூட சமஷ்டி அமைப்பையே கோரி நின்றன. மக்களும் அதற்காகவே பெருமளவில் வாக்களித்து வந்துள்ளார்கள். 

ஆகவே இன்றும் எம் மக்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்ற நிலையில் இருக்கின்றார்கள். எனவே தமிழ் மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் சரியானதாகவே இருக்கும்.

அரசியல் தீர்வு மட்டுமன்றி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இம்முறை நாங்கள் கூறியுள்ளோம். கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களால் எங்களுடைய அழுத்தங்கள் காரணமாக பல அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டுள்ளது.

 அதனை மக்கள் திருப்திகரமாகவே பார்க்கின்றார்கள் எனவே தான் அரசியல் தீர்வையும் அபிவிருத்தித் திட்டங்களையும் ஒரு சமாந்தரக் கோடுகளில் கொண்டு செல்லவுள்ளோம். இதுவே எங்கள் நோக்கமாகவுள்ளது எனத் தெரிவித்தார்.