மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி ஒன்றி்ல் சென்ற மூன்று இளைஞர்கள், முச்சக்கரவண்டியின் சாரதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துவிட்டு அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மஸ்கெலியா நகரில் நேற்று 21 ஆம் திகதி பகல் 2 ஆவது முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தில் இருந்து நோட்டன் பகுதியில் உள்ள அல்வா லக்சபானவிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி 3 இளைஞர்கள் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி முச்சக்கர வண்டியில் சென்றபோது முச்சக்கர வண்டி செல்லும் வழியில் அதன் ஓட்டுனருக்கு குளிர்பானம் ஒன்றை வழங்கி குடிக்குமாறு கூறி அவர்களும் அருந்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டி நோட்டன் பகுதியை அண்மித்த வேளையில் அதன் ஓட்டுனர் மயக்கமடைந்து முச்சக்கரவண்டி வடிகானில் சென்று நின்றதும் அதில் பயணித்த இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதியின் பணம், நகை என்பவற்றை கொள்ளையிட்டு தலைமறைவாகிவிட்டதாக நோட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் முச்சக்கரவண்டி சரிந்து கிடப்பதைக்கண்டு அவருக்கு உதவி செய்து அவரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து சந்தேக நபர்களை தேடும் பணியில் நோட்டன் பொலிசார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.