ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை எமது கட்சியின் பிரச்சினை. அந்தவகையில் சிறுபான்மைத் தலைமைகள் நடுநிலை வகித்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகின்றேனென்றும் ஐக்கிய மக்கள் சக்தியானது, மதவாதம், இனவாதம் கொண்டோரால் உருவாக்கப்பட்ட தேர்தல் கால கூட்டணி எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஆனந்ததாஸ் சஜிவானந்தன் தெரிவித்தார்.

அவர் கேசரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு தேர்தலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றது?
யானை சின்னமானது மக்களுக்கு பழக்கப்பட்டதொரு சின்னம். ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்துவிட்டது என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஐ.தே.க. இதற்கு முன்னரும் மிகப் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்களான, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்றவர்கள் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வெளியில் சென்றிருந்த போதும் ஐ.தே.க. வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் இன்றைய சூழலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கட்சியிலிருந்து சஜித்துடன் வெளியேறியிருக்கின்றார்கள். ஆனால் ஐ.தே.கட்சிக்காரர்கள், கீழ்மட்டத் தொண்டர்கள், மக்கள், ஐ.தே.க. உடனேயே இருக்கின்றார்கள். அந்த வகையில் ஐ.தே.க. இப்போதும் பலமாகவே இருக்கின்றது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு முன்வைக்கின்ற தேர்தல் பிரசாரக் கொள்ளை என்ன?
கம்பஹா மாவட்டத்தில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிந்து அல்லாமல் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படி பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடங்களில் அவர்களுக்கு தமது தமிழ் மொழி மூலமான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றது. கடந்த காலத்தில் வத்தளை, நீர்கொழும்பு பிரதேசங்கள்   இருமொழி பிரதேச செயலகங்களாக அடையாளப்படுத்தப்பட்டது. பிரகடனப்படுத்தப்படவில்லை. அவ்வாறான பிரதேசங்கள் அதாவது வத்தளை, நீர்கொழும்பு, அத்தனகல, தியகம, களனிய போன்ற பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் கணிசமான தொகையினர் இருக்கின்றனர். இவ்வாறான பிரதேச செயலகங்கள் இருமொழி பிரதேச செயலகங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதனூடாக தமிழ் மொழி மூலம் கற்றறிந்த இளம் சமூகத்துக்கு வேலைவாய்ப்புகள், அரச திணைக்களங்களில் வேலைவாய்ப்புகள், அதேபோல் தமது மொழியிலேயே தமக்கு பரீட்சயமான மொழியிலேயே அரசு சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் கணிசமான மக்களின் கோரிக்கையாக இருப்பது வீடு. எமது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அம் மக்களுக்கான வீட்டு வசதிகள் கட்டாயம் பெற்று கொடுக்கப்படும். தமிழ் பேசும் மக்களுக்கான பாடசாலை மிக நீண்டகாலமாக  அங்கு  இழுபறியில் இருக்கின்றது. அவற்றுக்கு நிச்சயமாக இந்த தேர்தலின் பின்னர் எமது தெரிவு ஐந்தாண்டு காலப்பகுதியில் இவ்விடயத்துக்கு முற்றுப்புள்ளியை கொடுக்கும். நாங்கள் தமிழ் மாணவர்களுக்கான பாடசாலையை நிச்சயமாக பெற்றுக்கொடுப்போம்.

வத்தளையில் தமிழ் பாடசாலையை அமைப்பது தொடர்பான திட்டத்தை கடந்த ஐ.தே.க. அரசாங்கம் முன்னெடுத்தும் பூர்த்தியடையவில்லையே?
2002 ஆம் ஆண்டளவில் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரனின் பணிப்புரைக்கமைய அந்த இடத்துக்கான நிதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் 2014 ஆம் ஆண்டு 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டு காணி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காணியை ஒதுக்கீடு செய்து முன்னாள் அமைச்சர் ஜோன் அமரத்துங்க கையெழுத்திட்டிருந்தார். ஆனால் பல அரசியல் காரணங்களினால் அவை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படாத ஒரு சூழலைத்தான் நாங்கள் காண்கின்றோம். அவற்றுக்கு நிச்சயமாக இம்முறை விடைகாணுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

கடந்த காலத்திலும் பல தலைவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அரசியல் செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களாலும் ஒரு தமிழ் பிரதிநிதியை உருவாக்கிக்கொள்ள முடியவில்லையே?
அது ஒரு குறைபாடாக இருந்த போதிலும், ஆரம்ப கட்டத்தில் விக்னேஸ்வரன் என்பவர் நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அவரே தமிழ் பாடசாலை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியிருந்தார். அவற்றின் வருகையுடன் இன்று வத்தளை பிரதேச சபையில் 3 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதுவொரு ஆரம்பம்தான். பிரதேச, நகர சபைகளிலிருந்து அடுத்தது மாகாண சபை, பாராளுமன்றம் செல்வதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அடிப்படையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க.விலிருந்துதான் அனைத்து நகர, பிரதேச சபைகளிலும் சிறுபான்மை மக்களிலிருந்து பிரதிநிதிகள் உருவாகியிருக்கின்றார்கள். இதனை அடிப்படையாகக்கொண்டு ஐ.தே.க.வினூடாகவே நாங்கள் மாகாணசபை, பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற முடியும். அந்த சூழலில் அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்று கருதுகின்றேன். அதற்கான எதிர்பார்ப்புடன் நாம் மக்கள் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றோம்.

கம்பஹா மாவட்டத்தில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு பல கட்சிகள் போட்டியிடும் நிலையில், அது தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளவதில் தாக்கத்தை செலுத்துமா?
பல கட்சிகள் போட்டியிட்டிருந்தாலும் அதில் தமிழ் வேட்பாளராக நானும் புதிய கட்சியொன்றின் தமிழ் வேட்பாளரும் போட்டியிடுகின்றோம். அந்த அடிப்படையில் போட்டி இருதரப்பு போட்டியாக இருப்பதற்குதான் வாய்ப்பு இருக்கின்றது. சிறுபான்மை மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே பயணித்து வந்தவர்கள். நாங்கள் அதற்கூடாகத்தான் எமது பிரதேச, நகரசபை உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றோம். அந்த அடிப்படையில் ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகியுள்ளது. நான் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் குறிப்பிடுகின்றேன். தனித் தமிழர்கள் என்று குறிப்பிடவில்லை. தமிழ் பேசும் மக்களின் வாக்குகளாக 100,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்றது. மக்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு இருக்கின்றது. அதை நாங்கள் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றோம். ஆகையால் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக எமக்கு உள்ளது.

கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படை பிரச்சினைகள் என்ன?
தமிழ் பேசும் மாணவர்களுக்கான தமிழ் பாடசாலை ஒன்றின் தேவை குறிப்பாக வத்தளை பிரதேசத்துக்கு அவசியமாக இருக்கின்றது. தேசிய பாடசாலைகளுக்கான தேவை உணரப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கான வள நிலையம் உருவாக்கப்படவேண்டியுள்ளது. அரசுசார்ந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் இருக்கின்றது. அதற்கு தகுதியானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற துறைகளை எமது சமூகம் வெகுவாக அடையாளம் கண்டு அதற்காக விண்ணப்பிக்கும் தன்மை குறைவாக இருக்கின்றது. அதனையும் ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

கம்பஹா மாவட்ட மக்களுக்காக நீங்கள் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் என்ன?
குறிப்பாக தமிழ் பாடசாலை தொடர்பாக அதிக சிரத்தை எடுத்திருந்தோம். விக்னேஸ்வரனின் முயற்சிகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம். அது நடைமுறைப்படுத்தப்படாமல் போனது ஒரு துன்பியல் நிகழ்வு. நாங்கள் எமது சமூகத்துக்கான அரசியல் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்திக் கொண்டு எமது இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தி அரசியல் ரீதியாக எவ்வாறு எம்மை பலப்படுத்திக் கொண்டு, சகல சமூகத்துடனும் ஒன்றிணைந்து வாழ்வது என்பதற்கு தயார்படுத்துகின்றோம். இதன்மூலம் எதிர்காலத்தில் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபின்னர், தங்களுடைய சொத்து விபரங்களை மக்களுக்கு சுயமாக வெளிப்படுத்த முயற்சிப்பீர்களா?
நாங்கள் எப்போதும் வெளிப்படையானவர்கள். எந்தவொரு ஒளிவு மறைவுக்கும் இடமில்லை.

ஐ.தே.க. பிளவின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முனைந்துள்ளனர். இது தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா?
ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை எமது கட்சியின் பிரச்சினை. அந்தவகையில் சிறுபான்மைத் தலைமைகள் நடுநிலை வகித்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகின்றேன். ஏனெனில் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில், சிறுபான்மைத் தலைவர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தில் நாமும் பிரதானமான சக்தி என தெரிவித்துள்ளார். இது மோசமானதொரு கூற்று. சிறுபான்மை மக்களை காட்டிக்கொடுக்கும் விடயமாகவே இதனை பார்க்கின்றேன். ஒரு தேசிய கட்சியிலிருந்தே வடக்கு – கிழக்குக்கு வெளியே அதிகளவான தமிழ் பிரதிநிதிகளை இதுவரை காலமும் கொண்டு வந்திருக்கின்றோம். அப்படியான கட்சியை பிளவுபடுத்தும்போது அது மிகப்பெரும் தாக்கத்தை சிறுபான்மை மக்கள் மீதே செலுத்தும். அந்த விழிப்புணர்வு இல்லாமல், இவ்வாறான கருத்துருவாக்கத்தை வெளியில் பரப்புவது, அரசியல் தற்கொலைக்கான நிலைப்பாடாகவே நான் கருதுகின்றேன்.

நடைபெறவுள்ள தேர்தலின் பின்னரான அரசாங்கத்தில் சிறுபான்மைத்துவ பிரதிநிதித்துவம் எந்தளவில் தாக்கத்தை செலுத்தும்?
சிறுபான்மை மக்களை பொறுத்தவரையிலும் சிறுபான்மைத் தலைவர்களின் அரசியலிலும் இத்தேர்தல் அச்சுறுத்தலான தேர்தலாகத்தான் இருக்கும். அது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் சூழல் இருக்கின்றது. ஐ.தே.க. பிளவு என்பது நேரடியாகவே சிறுபான்மை பிரதிநிதித்துவத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும். அதை சமனிலைப்படுத்தும் வகையில் ஐ.தே.கவின் ஊடாக சகல மாவட்டங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.தே.க.வும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?
ஐ.தே.கட்சியானது ஒரு தனிக்கட்சியாக பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது. தேர்தலுக்குப் பின்னர் சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுபவர்கள் ஐ.தே.கவை நோக்கிவர வாய்ப்பிருக்கின்றது. இணைந்து செயல்படுவதென்பது தவறான கருப்பொருள். ஐக்கிய மக்கள் சக்தியானது, மதவாதம், இனவாதம் கொண்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோரால் உருவாக்கப்பட்ட தேர்தல் கால கூட்டணி. தேர்தலின் பின்னர் அப்படியொரு கட்சி இருப்பதற்கான வாய்ப்பில்லை.

க.பிரசன்னா