சிறுத்தையொன்று மீண்டும் கம்பி வலையில் சிக்கி நேற்று உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி மாபகந்த பிரதேசத்தில் கோப்பி மரத்தில் கட்டப்பட்ட வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தையை மீட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

மாபகந்த பிரதேசத்தில் விவசாய காணியில் வனவிலங்குகள் நடமாடுவதால் அதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்குண்ட சிறுத்தை அதனை உடைத்துக்கொண்டு வெளியேற முயற்சித்த போது கோப்பி மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் அப்பிரதேச மக்கள் கோப்பி மரத்தில் சிக்குண்டு சிறுத்தை ஒன்று உள்ளதாக நல்லதண்ணி வனபாதுகாப்புதுறையினருக்கு  அறிவித்தனர். 

இதையடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கோப்பி மரத்தில் வலையில் சிக்கிய நிலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டு பார்த்தபோது 7 வயதுடைய, 7 அடி நீளம் 3 1/2 அடி உயரம் கொண்டது என தெரிவித்தனர்.

இது குறித்து நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் அறிக்கை முன்வைத்தபோது இறந்த சிறுத்தையின் உடலை ரந்தெனிகல மிருகவைத்தியசாலைக்கு அனுப்பி மரணம் தொடர்பான  அறிக்கையை மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளதாக நல்லதண்ணி வனத்துறையின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.