நுவரெலியா, நானுஓயாவிற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று  வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி தப்பி செல்ல முற்பட்டபோது சாரதியை கைதுசெய்து  நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நானுஒயா பகுதியில் இருந்து கிலாசோ மேற்பிரிவு தோட்டப் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி மீண்டும் நானுஓயாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது  75அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமந்துசென்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் நானுஒயா பெரகும்பர பகுதியைச் சேர்ந்த கே.யோகேஸ்வரன் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.