திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்கா பள்ளிவாசலில் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்  மூவரால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மூதுார் பொலிசார்  தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை  காலை  6.08 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

 

நேற்று நோன்புப் பெருநாள்நடைபெற்ற நிலையில், இன்று காலையில்  தொழுகையில் ஈடுபட்டிருந்தவரே வாளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் சம்பந்தபட்ட மூவரை மூதுார் பொலிசார் கைதுசெய்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

வாள்வெட்டுச் சம்பவத்தில் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தரே கொலைசெய்யப்பட்டவராவார்.

 

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்றுகாலை  நேரடியாக சென்று பார்வையிட்ட மூதுார் நீதிமன்ற பதில் நீதிவான்,  வாள்வெட்டுச் சம்பவத்தில் பலியானவரின் உடலை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி  சட்டவைத்திய  அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு  பொலிசாரைப் பணித்தார்.

இதனையடுத்து உடல் பொலிசாரினால் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கொல்லப்பட்வரை கூரிய வாளால் கொலையாளிகள்  பல இடங்களில் வெட்டியிருப்பது நேரடி விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

 இச்சம்வத்தில்  தொடர்பு பட்டதாகக் கருதப்படும் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சுல்தான் முகமது றிகாஸ், சுல்தான் முகமது கில்மி, சுல்தான் முகமது சியாம் என்ற மூன்று சகோதர்களே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் பலியான நபர், அவரது மைத்துனரான  அப்துல்காதர் இக்கிரம்  என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு 9 மாதம் 8 ஆம்  திகதி கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நடைபெற்று வந்தநிலையில்  கொலையுண்ட நபர்  3 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையிலேயே இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. 

வாள் வெட்டைமேற்கொண்டவர்கள் ஏற்கனவே துப்பாக்கி தாக்குதலில் கொலையானவரின்  மனைவியின் சகோதர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தங்களது சகோதரியின் கணவரான  காதர் இக்கிராமின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் பெருநாளின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றமையால் கொடூரமான சம்பமொன்பதால் குறித்த பகுதி பெரும் சோகத்தில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.