(செ.தேன்மொழி)

குருநாகல் அரச மண்டபம் உடைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அவர் கலாசார அலுவலக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டை மாத்திரமின்றி தங்களை பாதுகாப்பார்கள் என்று கருதியே 69 இலட்சம் பேர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு பெற்றுக் கொடுத்திருந்தனர். இவர்களது எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களைக் கூட முழுமையாக நடத்தமுடியவில்லை. இன்று கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவின் பிரசார கூட்டங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளன.

வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் ஊரில் நடத்த இருந்த பிரசார கூட்டத்திற்கே இவ்வாறு  தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஊரிலேயே இந்த நிலைமை என்றால் ஏனை ய பகுதிகளின் நிலைமையை எப்படி இருக்கும்.

இந்நிலையில் பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சிறை வைக்கப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர்கள் மூவர் , சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் 'எங்களிடம் பெருந் தொகையான ஆயுதங்கள் இருக்கின்றன, எமது ஆட்கள் பலர் வெளியில் இருக்கின்றனர். நாம் சிறைச்சாலையில் தலைவரையும் கொலைச் செய்வோம். எனமக்கு ஜனாதிபதி ஒரு பெரிய நபர் கிடையாது. பாதுகாப்பு செயலாளருக்கும் அவ்வாறே, முடிந்தால் அவரை இங்கு வரச்சொல்லுங்கள் ' என்று கூறியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனை எண்ணி ஜனாதிபதி வெட்கமடைய வேண்டும்.

குருநாகல் அரச மண்டப உடைப்பு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். புராதன சிறப்புரிமை மிக்க இடங்களை சேதப்படுத்தும் போது புராதன ஆய்வாளர்கள் , தேரர்கள் , தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் அமைதியாக இருப்பது ஏன்?  எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கம் இராணுவ ஆட்சியை ஸ்தாபித்து , நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்க கூட சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்காத நிலைமை ஏற்படும் என்றார். 

தேர்தல் காலத்தில் ராஜபக்ஷாக்களின் பிரசார செயற்பாடுகளுக்கு காசு இல்லாததன் காரணமாக யாரிடமாவது முற்பணம் பெற்றுக் கொண்டதன் காரணமாகவா ? அரச மண்டபம் உடைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு ஒருவாரத்திற்குள் பிரதமரால் பதிலளிக்க முடியாவிட்டால், கலாச்சார அமைச்சிலிருந்து அவர் விலகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.