(நா.தனுஜா)

ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் இருந்தும் விலகத்தயாராக இருப்பதாகப் பேசிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைக்குத் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருப்பது ஏன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சம்பிக்க, மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையில் இன்னமும் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறெனில் தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கு என்ன நேர்ந்தது? இந்தத் துரோகம் அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.