மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நேற்று ஒருவரை கைதுசெய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்கிளேயர் தோட்ட ஸ்டெலின் பிரிவை வதிவிடமாக கொண்ட 54 வயதுடைய 3 குழந்தைகளின் தாய் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி இரவு நெஞ்சு வலியால் இறந்துள்ளதாக அவரது மருமகளால் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் பார்வையிட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளதைக் கண்ட பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நீதவான் நேரடியாக சென்று சடலத்தை  பார்வையிட்டார். 

பிரேதத்தை மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிசார் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே தோட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையாவார்.

இதையடுத்து சந்தேக நபரை இன்று நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.