சவுதி அரேபியா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதானால் இந்த ஆண்டு சுமார் 1000 முஸ்லிம் யாத்ரீகர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இராஜ்ஜியத்தில் இருக்கும் 70 சதவீத  வெளிநாட்டினர், 30 சதவீத உள்நாட்டினர் உள்ளடங்கலான 1000 பேருக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் சில பத்திரிகையாளர்ள் யாத்திரையில் 10,000 பேர் வரையில் பங்கேற்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையானது ஜூலை 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

புனித நகரமான மக்காவை மையமாகக் கொண்ட இந்த யாத்திரையில் ஆண்டுதோறும் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பொதுவாக பங்கேற்பார்கள்.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக யாத்ரீயர்களின் எண்ணிக்கை வியத்தகு வகையில் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நோய்கள் இல்லாத 65 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்களை ஈர்க்கின்றன, மேலும் ஆண்டொன்றுக்கு அவரை 12 பில்லியன் டொலர்களையும் வருமானமாக ஈட்டித் தருகின்றது.

இந் நிலையில் இந்த முடிவானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவின் பொருளாதாரத்திற்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் 253,349 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 2,523 ஆக பதிவாகியுள்ளது.