மன்னார் அரிப்பு பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் அபராதம் செலுத்தியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் அரிப்பு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டைகளைப் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் அப்பகுதியிலுள்ள கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் இவர் பிடித்திருந்த 118 கடல் அட்டைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. சந்தேக நபரையும் மற்றும் கடல் அட்டைகளும் கடற்படையினர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குறித்த மீனவரை சிலாபத்துறை மற்றும் நானாட்டான் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்த போது சம்பந்தப்பட்ட மீனவர் தனது குற்றைத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து குற்றவாளிக்கு 5000 ரூபா அபராதம் விதித்தார்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் அரச உடமையாக்கப்பட்டதை தொடர்ந்து அவைகள் ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை மன்னார் கடற்தொழில் திணைக்களம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.