(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ்வினருடன் டீல் போட்டுக்கொண்டு செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் சதித்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிக்கிக்கொண்டது.

தொழிநுட்பத்துடன் முன்னுக்கு செல்வதன் மூலமே எதிர்காலத்தை வெற்றிகாெள்ள முடியும். என்றாலும் மைத்திரிபால சிறிசேன நவீன தொழிநுட்ப திட்டங்களை விரும்பாத தலைவராக இருந்தார் என ஐக்கிய தேசிய கட்சி பிரதி செயலாளரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

களனி தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நவீன தொழிநுட்பத்துடன் முன்னுக்கு செல்வதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும். கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாங்கள் முன்னெடுத்த தொழிநுட்ப வேலைத்திட்டங்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை முன்னெடுக்கவிடாமல் தடுத்துவந்தார். அவர் ராஜபக்ஷ்வினரும் டீல் போட்டுக்கொண்டு செயற்பட்டிருக்கின்றார்.  அவரின் சதித்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிக்கிக்கொண்டது.

கல்வி அமைச்சினூடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு இருந்த மடிக்கணணி, நாடு பூராகவும் இலவசமாக மற்றும் குறைந்த கட்டணத்தில் இணையத்தள வசதிகளை வழங்க இருந்தோம். இவை அனைத்தையும் மைத்திரிபால சிறிசேன தடைகளை ஏற்படுத்தி, அவற்றை தொடரவிடாது செயற்பட்டார். நவீன தொழிநுட்ட திட்டங்களை விரும்பாத தலைவராகவே மைத்திரபால சிறிசேன இருந்துவந்தார்.

அத்துடன் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக என்னை நியமித்த மைத்திரிபால சிறிசேன, அதில் எனக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கியிருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு மக்கள் அமைதி தொடர்பான எந்த பொறுப்பும் இல்லாத சில விடயங்களை மாத்திரம் வர்த்தமானி படுத்தி இருந்தார். ஆனால் அவர் அவருக்கு இருந்த பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாமல் இறுதியில் நாட்டின் தலையெழுத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு மாற்றிவிட்டுச்சென்றார். எப்போதுமே சுயநலமாக செயற்படும் மைத்திரிபால சிறிசேன போன்ற சுயநலவாதி ஒருவரை நாட்டின் தலைவராக கொண்டுவந்தமையிட்டு கவலையடைகின்றோம் என்றார்.