இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் ஓடு உட்பட உடல் முழுக்க மஞ்சள் நிறத்திலான ஆமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சுஜன்பூர் கிராம மக்கள், மஞ்சள் நிறத்திலான ஆமை ஒன்றை மீட்டுள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த கிராம மக்கள், பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து இந்திய வனத்துறை கண்காணிப்பாளரான பானூமித்ரா ஆச்சார்யா, ‛ஓடு மற்றும் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக உள்ள ஆமை மீட்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய வகை ஆமை. இது போன்ற ஆமையை இதற்கு முன்னர் நான் பார்த்ததே இல்லை' என கூறியுள்ளார்.

‛அநேகமாக அது ஒரு அல்பினோவாக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவில் உள்ளவர்களால் இதுபோன்ற ஒரு வித்தியாசமான ஆமை பதிவு செய்யப்பட்டுள்ளது' என டுவிட்டரில் வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, மஞ்சள் நிற ஆமை நீரில் நீந்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மற்றுமொரு பதிவில், 'அருகில் எடுக்கப்பட்ட அதே ஆமையின் மற்றுமொரு புகைப்படம். அல்பினிசத்தின் அம்சத்தை குறிக்கும் அதன் பிங்க் நிற கண்களை பாருங்கள்' எனவும் கூறியுள்ளார்.

கடந்த மாதம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள டியுலி அணையில் மீனவர்களால் அரிய வகை ட்ரையோனிச்சிடே ஆமை பிடிபட்டது. ஆமை பின்னர் வனத்துறை அதிகாரிகளால் அணையில் விடப்பட்டது. ட்ரையோனிச்சிடே ஆமைகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் மென்மையான ஆமைகள் ஆகும். ஆமை 30 கிலோவுக்கு மேல் இருந்ததாகவும், அதன் அதிகபட்ச ஆயுள் 50 ஆண்டுகள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணொளி; https://twitter.com/i/status/1285028394950778884