(எம்.மனோசித்ரா)

நாட்டின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக ஆரம்பித்துள்ள சீரற்ற காலநிலை சில தினங்களுக்குத் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் மேல் , சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் சீத்தாவாக்கை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் , களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் பலிந்தனுவ  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் , கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட மற்றும் எஹெலியகொட  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் , காலி மாவட்டத்தில் அல்பிட்டிய , நாகொட மற்றும் நியாகம ஆகிய  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னதுவ - இமதுவ பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக தெற்கு அதிவேக பாதை மூடப்பட்டிருந்தது. இதனால் அந்த பாதையூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

மழைவீழ்ச்சி

மேல் , சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 வரை சில பிரதேசங்களில் 200 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேசத்தில் 201 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே போன்று காலி - ஹியாரே பிரதேசத்தில் 160 மில்லி மீற்றர் , அதுகந்துர பிரதேசத்தில் 137 மில்லி மீற்றர் , களுத்துறை - மீகஹாதென்ன பிரதேசத்தில் 117 மில்லி மீற்றர் , இரத்தினபுரி - பரகடுவ பிரதேசத்தில் 106 மில்லி மீற்றர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பிரதேசத்தில் 109 மில்லி மீற்றர் , பஸ்யால பிரதேசத்தில் 100 மில்லி மீற்றர் , காலி மாவட்டத்தில் ஹேகொட பிரதேசத்தில் 82 மில்லி மீற்றர் , மெனிக்கந்த பிரதேசத்தில் 78 மில்லி மீற்றர் மற்றும் யக்கலமுல்ல பிரதேசத்தில் 74.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது.