இதுவரை எனது அரசியல் பயணத்தில் நூற்றுக்கு 5 வீத  அபிவிருத்தியே செய்துள்ளேன். இன்னும் 95 சதவீத அபிவிருத்தி செய்ய வேண்டும், என  யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்.தென்மராட்சி,  கல்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஒரு தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது  சிங்கள மக்கள் வாக்களித்தால் அது சிங்கள ஆட்சி. இப்படி நாம் வாக்களிக்காது ஒதுங்கி இருந்தால் அது சிங்கள ஆட்சியாக மாறி விடும். இந்த நிலை வராமல்  நாம் எல்லோரும் சேர்ந்து வாக்களித்தால் தான் நாம் ஒரு நல்ல  பயனைப் பெற முடியும். 

ரவிராஜ் ஒரு நல்ல மனிதர்.  அவரின் பெயரை வைத்து  அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.  இந்த செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு   செய்துள்ளது. தமிழ் மக்களின்  வாக்குகளை  சிதைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த  பெரும் சதியே இது.

நான் தேசிய பட்டியலில்  உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு சென்ற போது  எனக்கு மக்களின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டேன்.

நீங்கள்  வாக்களித்து என்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும்.  நீங்கள் என்னை தெரிவு செய்து நான் பாராளுமன்றம் சென்றால், எமது மக்களுக்கும் யாழ். மண்ணுக்கும் நிறைய உதவிகளும் அபிவிருத்திகளும் செய்வேன்.எனத் தெரிவித்தார்.