பூட்டானின் கிழக்குப் பகுதியிலுள்ள சக்ரெங் வனவிலங்கு சரணாலயம் தனக்கு சொந்தமானதென்று உரிமைகோருவதன் மூலம் சீனா மீண்டும் அதன் விஸ்தரிப்புவாத அபிலாசைகளை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது. இதுகாலவரையில், மேற்கு மற்றும் வடமத்திய பூட்டானின் பிராந்தியங்களுக்கு உரிமைகோரிய பெய்ஜிங் இப்போது மூன்றாவது நிலப்பகுதி ஒன்றுக்கு உரிமை கோருவதன் மூலம் பூட்டானுடனான அதன் எல்லைத் தகராறுகளுக்கு மேலும் ஒரு பகுதியை சேர்த்துக் கொண்டுள்ளது. இப்போது பூட்டானின் நிலப்பகுதி மீது  கண்வைக்கிறது சீனா

பூட்டானின் கிழக்குப் பகுதியிலுள்ள சக்ரெங் வனவிலங்கு சரணாலயம் தனக்கு சொந்தமானதென்று உரிமைகோருவதன் மூலம் சீனா மீண்டும் அதன் விஸ்தரிப்புவாத அபிலாசைகளை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது. இதுகாலவரையில், மேற்கு மற்றும் வடமத்திய பூட்டானின் பிராந்தியங்களுக்கு உரிமைகோரிய பெய்ஜிங் இப்போது மூன்றாவது நிலப்பகுதி ஒன்றுக்கு உரிமை கோருவதன் மூலம் பூட்டானுடனான அதன் எல்லைத் தகராறுகளுக்கு மேலும் ஒரு பகுதியை சேர்த்துக் கொண்டுள்ளது. 

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் உட்கட்டமைப்புகளை தரமுயர்த்துவதற்காக அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் (Global Environment Facility) உலக சுற்றாடலியல் நிறுவனத்திடமிருந்து பூட்டானிய அரசாங்கம் நன்கொடையை கேட்டிருந்தது. நன்கொடைக்கான இந்த கோரிக்கையை எதிர்த்த சீனா, அந்த சரணாலயம் சர்ச்சைக்குரிய பிராந்தியம் என்று வாதிட்டது. தங்களுக்கிடையிலான எல்லைத் தகராறுகளுக்கு தீர்வு காண்பதற்காக சீன அதிகாரிகளும் பூட்டானிய அதிகாரிகளும் நடத்திவருகின்ற பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட தகராறுக்குரிய பிராந்தியங்களில் சக்ரெங் சரணாலயமும் ஒன்று என்று கூறி சீன அதிகாரிகள் தங்களது உரிமை கோரலுக்கு வலுச் சேர்ப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் இந்த உரிமை கோரலை பூட்டான் திட்டவட்டமாக நிராகரித்தது. சக்ரெங் பகுதி மீதான சுயாதிபத்தியத்தை தானே கொண்டிருப்பதாக வலியுறுத்தியிருக்கும் பூட்டான் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அந்தப்பகுதி ஒருபோதுமே பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. திம்புவின் இந்த முனைப்பான வலியுறுத்தல் இமாலயத்தில் சீனாவின் பிராந்திய விஸ்தரிப்புவாத அபிலாசைகளையும் அதன் இரண்டகத்தனத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. பூட்டான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை பலவீனம் என்று நினைத்து பூட்டானிடமிருந்து சீனா மேலும் நிலப் பகுதிகளைக் கோரும்.

பூட்டானில் சீனாவின் புதிய பிராந்திய உரிமை கோரல் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் அக்கறைக்குரியது. முதலாவதாக, பூட்டான் இந்தியாவின் ஒரு நட்பு நாடு. அதன் பிராந்திய சுயாதிபத்தியத்தை மலினப்படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையும் டில்லியினால் பாரதூரமானதாக நோக்கப்பட வேண்டும். முக்கியமாக, சக்ரெங் சரணாலயம் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் சுமார் 90ஆயிரம் சதுர கிலோமீற்றர் பிராந்தியத்துக்கு சீனா உரிமை கோருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் ராவாங் நகர் அந்த சரணாலயத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. சரணாலயப் பகுதி மீது சீனா உரிமை கோருவது எதிர்காலத்தில் ரவாங்கை கைப்பற்றுவதற்கு வசதியாக அந்த நகருக்கான நுழைவு வசதியை பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

மே மாதத்திலிருந்து சீனா இரகசியமாக ஊடுருவி இந்திய பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்திருந்தது. இந்தியாவுடனான கட்டுப்பாட்டு எல்லையில் மேற்கு பகுதியே அண்மைய மாதங்களில் சீனாவின் இலக்காக இருந்த அதேவேளை, சிக்கிம் மாநிலத்திலும்;; அதன் ஊடுருவல்கள் இருந்து வந்தன. அருணாச்சலப் பிரதேசத்துக்கு அண்மையாகவும் கூட சீனப்படைகள் குவிக்கப்பட்டன. மேற்குப் பகுதியில்  படைவாபஸ் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்ற அதேவேளை, பூட்டான், சிக்கிம் அல்லது அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவுவதற்காக சீனா முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கக்கூடும்.

லடாக்கில் சீனப்படைகள் குவிப்புக்கு எதிராக முன்கூட்டியே நேரகாலத்தோடு மிகவும் உறுதியான முறையில் நடவடிக்கை எடுப்பதில் நரேந்திரமோடி அரசாங்கம் இழைத்த தவறு மேற்குப் பகுதியில் சீனாவின் நில அபகரிப்பினால் ஆழமாக பாதிக்கக்கூடிய ஒரு பலவீன நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. கட்டுப்பாட்டு எல்லையின் கிழக்கு பகுதியில் சீன ஊடுருவல் இடம்பெறலாம் என்பதை உணர்ந்து இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிழக்கு பகுதியில்  இந்தியா அதன் எல்லை உட்கட்டமைப்புகளையும் இராணுவ ஆற்றலையும் மேம்படுத்தி வந்திருக்கிறது. ஆனால், ரவாங் நகருக்கு அண்மையாக லும் லாவை கிழக்கு பூட்டானுடன் இணைக்கும் வீதியொன்றை நிர்மாணிக்கும் திட்டங்களுக்கு திம்புவின் சம்மதம் இன்னமும் கிடைக்கவில்லை.

இந்த உத்தேச வீதி இந்தியா மீது சீனா தாக்குதலொன்றை தொடுக்கும் பட்சத்தில் எல்லைக்கு இந்திய துருப்புக்களை துரிதமாக நகர்த்துவதற்கு உதவும். ஆனால், சீனர்களை தொலைவில் வைத்திருப்பதற்காக டில்லி திம்புவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டும். 

(டெக்கான் ஹெரால்ட்)