(எம்.மனோசித்ரா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டுமாயின் குருணாகல் மரபுரிமையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷ போன்றவர்களது ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது என்று நாம் நம்பினோம்.

 எனினும் ராஜபக்ஷக்களுக்களது பெருமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர்களுக்கு கீழ் உள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளர் என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

உடைக்கப்பட்டுள்ள புவனேகபாகு மன்னனுடைய அரசசபையை பார்வையிடுவதற்காக இன்று  ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது,

சீகியாவிற்கு வருகை தந்த தமிழ் இளைஞரொருவர் அங்குள்ள சுவரில் கிருக்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அதனை அண்மித்த விகாரையொன்றில் வேறு இளைஞர்கள் சிலர் முறைதவறான புகைப்படம் எடுத்தமைக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால் இத்தனை வரலாற்று சிறப்பும் முக்கியத்துமும் மிக்க இந்த கட்டடம் உடைக்கப்பட்டமைக்கு எதிராக எங்கு சட்டம் நடைமுறைப்பட்டுள்ளது ? நாட்டின் சட்டம் எங்குசென்றது ? பலமற்ற பொது மக்களுக்கு மாத்திரம் தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா ? ஆட்சியாளர்களுக்கும் அவர்களது சேவையாளர்களும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட தேவையில்லையா ?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் அவரது வேலைத்திட்டத்தை இதில் காண்பிக்குமாறு கோருகின்றோம். கிழக்கிலும் இது போன்று தொல்பொருள் முக்கியத்துவமுடைய இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் வாழும் இந்த பிரதேசத்திலும் இவ்வாறு நடைபெறுகிறது என்றால் நாட்டின் நிலைமை என்ன ? இங்கு எந்த அரசியல் பிரச்சினையும் இல்லை. இது போன்ற வேறு சம்பவங்கள் பற்றி வாய்திறக்காத அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை பற்றி மாத்திரம் அரசியல் மேடைகளில் பேசுகின்றனர்.

ஆனால் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் எமக்கு உரிமை உள்ளது. இந்த கட்டம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டு தேசிய சொத்துக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இதுவேயாகும். கோத்தாபய ராஜபக்ஷ போன்றோர் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என்று நாம் எண்ணினோம். 

தற்போது பௌத்த மதகுருமார்களைக் கொண்டு இதனை தவற்றதாகக் காண்பிக்குமாறு பிரதமரிடம் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாகக் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது சரியாக்கக் கூடிய தவறா?

எனவே நகரசபை முதல்வர் உடனடியாக பதவி விலகி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தொல்பொருளியல் திணைக்களமும் செயலற்றுப் போயுள்ளது. தற்போது தொல்பொருளியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணம் என்ன ? ராஜபக்ஷக்களின் பலத்தின் கீழ் இருப்பவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். 

குருணாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதியை நிலைநாட்ட வேண்டும். ஒரு சதமேனும் மக்களின் வரிப்பணத்தில் இல்லாமல் இதனை தகர்த்தவர்களது சொந்த செலவில் இந்த கட்டம் புனரமைக்கப்பட வேண்டும்.