(எம்.மனோசித்ரா)

எக்சா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்தாபய ராஜபக்ஷ மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் கையெழுத்திடமாட்டார் என்பதற்கு  உத்தரவாதம் என்ன என்று கேள்வியெழுப்பிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜித ஹேரத், முடிந்தால் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான நிலைப்பாட்டை பொதுத் தேர்தலுக்கு முன்னர் வெளிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் கூறினார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலின் போது எம்.சி.சி. ஒப்பந்தமே பொதுஜன பெரமுனவுடைய பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது. ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலங்களில் ஒப்பந்தத்தை கிழித்தெறிவதாக ராஜபக்ஷக்கள் கூறினர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் அது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிடுமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்தோம்.

ஜூன் 25 ஆம் திகதி மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கை இம்மாதம் முதலாம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது இரு வாரங்கள் இது தொடர்பில் அமைச்சரவை மீளாய்வு செய்யும் என்று கூறப்பட்டது. பின்னர் மீளாய்வு காலம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இவ்வாறு வீணாக காலத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும்.

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய  அமெரிக்கா தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்க கூடாது. அவ்வாறெனில் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டும். அதே போன்று அமெரிக்க பாதுகாப்புபடைகள் அல்லது அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கத்தால் தலையிட முடியாது.

2017 ஆம் ஆண்டு நேபாளம் இதே போன்ற எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்நாட்டு மின் உற்பத்தி தொடர்பிலேயே அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கையெழுத்திட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் அமெரிக்க அரசாங்கம் அதற்கான நிதியை வழங்கவில்லை. இந்த காலத்திற்குள்  அமெரிக்கா  தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய 16 ஒப்பந்தங்களில் நேபாளத்தை பலவந்தப்படுத்தி கையெழுத்திட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. மறுபுறம் கையெழுத்திடாத ஒப்பந்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவது எந்த முறையிலாகும் ? மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம் என்றார். 

தற்போது இந்த அரசாங்கம் தொல்லியல் முக்கியத்துவமுடையவற்றை  அழிக்க ஆரம்பித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க புவனேகபாகு மன்னனுடைய அரச சபை தகர்த்தெறியப்பட்டள்ளது. இது முழுமையாக தொல்லியல் சட்டத்திற்கு முரணானதாகும். இதற்கு பிணை வழங்க முடியாது. தற்போதைய பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனவே இந்த வரலாற்று முக்கியத்துவம் உடைய கட்டடத்தை உடைத்தவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.