(இராஜதுரை ஹஷான்)

எமது அரசியல் கொள்கை தொடர்பில்  தென்னிலங்கையின்  நிலைப்பாடு என்ன  என்பது குறித்து  கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.  மாகாண சபை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வடக்கு  மக்கள் ஆதரவு   வழங்கவேண்டும் என  கடற்தொழில் வளங்கள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

  இவ்விடயம் தொடர்பில் அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும்  எமது கொள்கையில் எவ்வித வேறுப்பாடும் கிடையாது.  அரசியல் ரீதியில் அன்று என்ன நிலைப்பாட்டில் இருந்தமோ, அந்த நிலைப்பாட்டில் தான் தற்போதும் உள்ளோம். ஆட்சி மாறும் போது கொள்கைகளை மாற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது..

 வடக்கு  மக்கள்  பல எதிர்பார்ப்புக்கு மத்தியில்  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கடந்த  காலத்தில் ஆதரவு வழங்கினார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டதா என்பதை  அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எமது கொள்கை தொடர்பில்  தென்னிலங்கையில்  என்ன கருதுகிறார்கள். என்பது குறித்து அக்கறை கொள்ளவேண்டிய தேவை  எமக்கு கிடையாது.   நிறைவேற்ற கூடிய விடயங்கள் குறித்து  மக்கள்  மத்தியில் கருத்துரைக்க வேண்டும்.

  மாகாண சபை   முறைமையை  முழுமையாக   நடைமுறைப்படுத்தி அதனூடாக  முரண்பட்ட விதத்தில் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதே  புத்திசாலித்தனமாகும். அபிவிருத்தி,   அடிப்படை  உரிமைகள் ஆகியவற்றை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசாங்கத்தில்  இவற்றை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும்.  அதற்கான ஆணையை  வடக்கு மக்கள்  வழங்க வேண்டும் என்றார்.

--