(நேர்காணல்ஆர்.ராம்)

தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலிப்பதும் அதனை வன்முறை கொண்டு அடக்க முயற்சிப்பதும் மிகமோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்துமென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், செயற்பாடுகளிலிருந்து உங்களது அணி எத்தகைய வேறுபாடுகளைக்கொண்டிருக்கின்றது?

பதில்:-முதலாவதாக நாங்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவதற்கான கோசங்களாக எதனையும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை மையப்படுத்தியே எமது விடயங்களை முன்வைத்துள்ளோம். அந்தவகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியானது, தமிழ்மக்களின் இருப்பைப் பாதுகாத்தல், வடக்கு கிழக்கில் வாழும் இளைஞர்கள் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதை அடிப்படையாகக்கொண்டு நிலைபேறான அபிவிருத்திகளை முன்னெடுத்தல், இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையை முன்னெடுத்தல், யுத்தக்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதை வலியுறுத்தல் மனித குலத்துக்கு எதிரான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமையை உறுதி செய்தல்,  தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டுதல் உள்ளிட்ட விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றோம்.  

கேள்வி:- நீங்கள் குறிப்பிட்ட விடயங்களையே ஏனைய தமிழ்த் தேசியத் தரப்புக்களாக இருக்கின்ற, கூட்டமைப்பும், முன்னணியும் கூறுகின்றனவே?

பதில்:-அவ்வாறில்லை, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அதன் பேச்சாளர் சுமந்திரன்?அமைச்சுப்பதவிகளை எடுப்பதற்கு தம்மைப் பெருவாரியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும்படிக் கோருகின்றார். கடந்த அரசாங்கம் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்புகளில் தோற்கடிக்கப்படாமலும், நம்பிக்கையில்லா தீர்மானங்களில் தோற்கடிக்கப்படாமலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாத்து வந்தனர். உயர்நீதிமன்றம் வரை சென்று ரணில் விக்கிரம சிங்கவை மீண்டும் பிரதமராக்கினர். 

அவ்வாறிருக்க அமைச்சு பதவி விடயத்தில் சம்பந்தன் தேர்தல் காலங்களில் இது பற்றி பேசத்தேவையில்லை என்றுதான் கூறியிருக்கின்றார். இதன்பொருள் தேர்தலின் பின்னர் இது பற்றி பேசலாம் என்பதாகும். இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கையைக் கைவிட்டு முற்று முழுதாக அரசுடன் இரண்டறக்கலக்க இருப்பதால் அவர்கள் தமிழ்மக்களின் அபிலாஷைகளிலிருந்து விலகி இருப்பது புலனாகின்றது.

ஆகவே ஸ்ரீ கூட்டமைப்பும் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரச மற்றும் பங்காளிகளைப் போன்று வேலைவாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்வது என்ற போர்வையில் தனிமனித சுகபோகவாழ்க்கையை நோக்கிச் செல்வதைக் காணமுடிகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், ஒருநாடு இருதேசம் என்ற ஒருகருத்தை முன்மொழிகிறார்களே தவிர, அவற்றை அடைவதற்கான வழிமுறைகளோ வரைபடங்களோ எதுவுமே இல்லாமல் வெற்றுக்கோசமிடுபவர்களாக மட்டுமே தோற்றமளிக்கின்றார்கள். தீர்வுக்காக நண்பர்களை சம்பாதிக்க வேண்டிய வேளையில் எதிரிகளை உருவாக்குவதையே குறியாகக் கொண்டுள்ளனர்.

கேள்வி:- யாழ்மாவட்ட தேர்தல் களத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குச் சவாலான தரப்பாக எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்:-தேர்தல் அறிவித்து ஆரம்ப நாட்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எமக்குச் சவால் எனக்கூறப்பட்டது. அவர்கள் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவியது. ஆனால் அவையாவும் இப்பொழுது தலைகீழாக மாறியுள்ளது. தபால் மூலம் வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் எமக்கே வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளனர். சிறிய கூட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று நாம் பிரசாத்தில் ஈடுபடுகின்ற போதும் எமக்கு அமோக வரவேற்பளிக்கப்படுகின்றது. இதேசமயம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இளைஞர்களின் கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை எமது கிராமங்களுக்கு வரவேண்டாம் என்று கூறுகின்றனர்.

இதுவரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் அவர்கள் நடாத்தவில்லை. ஆனால் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி என்பது எட்டுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடாத்தியிருக்கின்றது. நூற்றுக்கணக்கான கிராம மட்டக் கூட்டங்களை நடாத்தியிருக்கின்றது. எங்களுடன் இணைந்து இளைஞர்களும் யுவதிகளும் பொதுமக்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இப்பொழுது தமிழ்மக்கள் தேசியக்கூட்டணி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றுக் கொள்வாரகள் என்று பெரும்பாலான நம்பிக்கை வடக்கு-கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பொழுது எமக்கு சவால் விடக்கூடிய தரப்பு எதுவும் இல்லை என்றே நாம் நம்புகிறோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகக் கூறியுள்ள நிலையில், உங்களது அணிக்கு மக்களாணை கிடைக்கும் பட்சத்தில் அந்தப்பணிகளில் வகிபாகத் தினைக்கொள்வீர்களா?

பதில்:-மூன்றில் இரண்டு பெரும்பான்மை, எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி கூட்டு அரசாங்கம் மேலும் அரசுடன் பங்காளிகளாகச் செயற்பட்டமை இவை அனைத்தும் இருந்தும் உருவாக்க முடியாத ஒரு அரசியல் சாசனத்தை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை அழுத்தம் திருத்தமாகப் பிரயோகிக்க விரும்பும் ஒரு ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து பெற்றுவிட முடியுமா? அத்தகையவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல்சாசனத்தை உருவாக்க ஒத்துழைப்புக்களை வழங்குவார்களா? 

தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொடுக்க விருப்பம் இல்லை என்பதே யதார்த்த பூர்வமான உண்மையாகும். இவ்வாறிருக்க கூட்டமைப்பு அடுத்த அரசாங்கத்துடன் பேசுவோம் என்பதிலிருந்து சிங்கள அரசாங்கங்களை இன்னும் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொண்டாலும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றலாம் எண்ணுகின்றார்களோ தெரியவில்லை. 

கேள்வி:- அப்படியாயின் புதிய அரசியல் சாசனமொன்று சாத்தியமில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்:-தமிழ்மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கக்கூடிய புதிய அரசியல் சாசனம் உருவாகவேண்டுமாக இருந்தால், ஒன்றில் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் ஒருசர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், தமிழ்மக்களின் மீது கடந்தகாலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட் டஇனப்படுகொலையைப்போல் இன்னொரு படுகொலை ஏற்படாமல் இருக்கக்கூடியதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் அரசாங்கத்தின் மீதுள்ள இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை விசாரித்து அதனூடாக தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நிலை வரவேண்டும்.

இவற்றை உள்ளடக்கியதாகவும் அதிகாரப்பரவலாத்ததையும் கொண்டதான அரசியல் சாசனமே தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். அதனைத் தவிர்த்து புதிய அரசியல் சாசனத்திற்கான பேச்சுவார்த்தை என்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாளிகளாக்குவதற்கான முயற்சியாகவே அமையும்.

கேள்வி:-  இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி தீர்வு என்பது சாத்தியமா? அதனைப் பெறுவதற்கான சாத்தியப்பாடான வழிகளை வெளிப்படுத்துவீர்களா?

பதில்:-இணைந்தவடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம். ஆகவேவடக்கு-கிழக்கு இணைப்பு என்பதும் சமஷ்டி ஆட்சி முறை என்பதும் தமிழ் மக்கள் தமது சொந்தப்பிரதேசத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு செயற்பாடாகும். இலங்கை அரசாங்கம் அவற்றை ஏற்றுக்கொள்வதில் பின்னிற்கிறது என்பதை நாம் அறிவோம். 

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகள், உள்நாட்டில் பாரிய யுத்தத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலிப்பதும் அதனை வன்முறை கொண்டு அடக்க முயற்சிப்பதும் மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளாகும். 

நாட்டின்அபிவிருத்தியில்நம்பிக்கைவைக்கக்கூடியஅரசாங்கம்இ பல்லினபலமொழிகளைப்பேசுகின்றநாட்டுமக்களைச்சமமாகமதித்துஅவர்களின்உரிமைகளைஅங்கீகரித்துஅவற்றைமுன்னெடுத்துச்செல்வதேஅபிவிருத்திக்கானவழிமுறையாகும். 

அதனை அரசாங்கம் நிறைவேற்றாத பட்சத்தில் அரசாங்கத்தின் மீது பல்வேறுபட்ட அழுத்தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.

கேள்வி: தமிழரசு க்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தமிழ் கட்சிகளை தேர்தலின் பின்னர் ஒருங்கிணைக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவீர்களா?

பதில்:-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய தலைவர்களுக்கு சுடலைஞானம் பிறந்துள்ளது போல் தோன்றுகின்றது. மாவை.சேனாதிராஜாவும் யாழ் மாவட்டத்தில் தோல்வியின் விளிம்பிலேயே நிற்கின்றார். அவரைத் தோற்கடித்து தாங்கள் வெல்வதற்கு பலவேட்பாளர்களும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். இதுஅவருக்கும் தெரியும். ஆகவேதான், தேர்தலுக்குப் பின்னர்,  தாம் எல்லோரையும் ஒருங்கிணைக்க இருப்பதாக கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளார்.

தமிழரசுக்கட்சியே இப்பொழுது சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. இன்று அவர்களே நவக்கிரகம் போன்று செயற்படுகின்றார்கள். அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இவ்வாறான சூழ்நிலையில், மாவை சேனாதிராஜா பாராளுமன்றம் சென்று, எல்லோரையும் ஒருங்கிணைப்பார் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

கேள்வி:- உங்களது கூட்டணி வெறுமனே தேர்தலை மையப்படுத்தியதாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறதே?

பதில்:- இதுவொருதவறான கருத்து. தேர்தல் காலங்களில் எமது எதிர்த்தரப்புக்களால் எமக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளே. தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி என்பது நாங்கள் விரும்பி ஏற்படுத்திய ஒன்றல்ல. மாறாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது தமிழ்மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கைவிட்டு, தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு, எமதுமக்களின்நலன்களைப்புறந்தள்ளிஇ இலங்கைஅரசாங்கத்தின்விசுவாசிகளாகவும்பாதுகாவலர்களாகவும்செயற்பட்டதால்இ தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தகுதியான ஒருமாற்று அணி தேவைப்பட்டது. அந்தவகையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்து, விலகிச்சென்றபெரும்பான்மையானகட்சிகளும்தனிநபர்களும்இணைந்துதமிழ்மக்கள்தேசியக்கூட்டணியைஉருவாக்கினோம். இந்தக் கூட்டணியை உருவாக்க ஏறத்தாழ இரண்டு வருட காலம் நாங்கள் உழைத்திருக்கிறோம். ஏன்ன செய்யப்போகிறோம் எவ்வாறு செய்யப்போகிறோம் என திட்டமிட்டிருக்கின்றோம். ஆகவே இது வெறுமனே ஒரு தேர்தலுக்கானகூட்டணி அல்ல. தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்லவும், அதற்கான சர்வதேச ஆதரவைத் திரட்டவும் தமிழகம் மற்றும் புலம்பெயர் உறவுகளின் தொடர்புகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்களுக்கான  நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை பலமுறை வெளிப்படையாகக் கூறியிருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஆரம்பித்த பொழுது, அதில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவை இதில் கையெழுத்திட்டன. கையெழுத்திட்ட கட்சிகளில் மூன்று கட்சிகள் இப்பொழுது அதில் இல்லை. நான்காவது கட்சியான ரெலோவின் சார்பில் கைச்சாத்திட்ட சிறிகாந்தாவும் அவருடன் சேர்ந்து பலரும் இப்பொழுது ரெலோவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தற்பொழுது தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி மாத்திரமே உண்மையான மக்கள் நலன்சார்ந்த கூட்டணியாகச் செயற்படுகின்றது. ஏனைய கட்சிகளை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றிய தமிழரசுக்கட்சி இன்று உட்கட்சிமோதலில் ஈடுபட்டு, அரசாங்க விசுவாசிகளாகமாறி, கட்சிக்குள் உருப்படியான கொள்கையின்றி, ஒருவருக்கு ஒருவர் முகம்கொடுத்துப்பேசத் திராணியற்று நவக்கிரக நிலைக்கு மாறியுள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க, தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி மீது விரல் நீட்டி விமர்சனம் வைக்கக்கூடிய அளவிற்கு எவருக்கும் அருகதை இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கேள்வி:- இம்முறை தமிழ்த்தேசிய அரசியலில் அபிலாசைகள் அபிவிருத்தி ஆகியவற்றிற்கான கோரிக்கைகள் சமாந்தரமாகச் செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு மேலெழுந்துள்ளதே?

பதில்:-யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட நிலையில், தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், யுத்தத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் என பலதரப்பட்டோருக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது. இதுவரையில் வீதிகள், மின்சாரம், போக்குவரத்து, தொலைபேசிவசதி போன்ற உட்கட்டுமானவசதிகள் ஓரளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட விவசாய கிராமங்களில் இத்தகைய உட்கட்டுமான வசதிகள் முழுமை பெறவில்லை. 

இதற்கு முன்னர் இருந்த ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் கம்பரெலிய என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய உட்கட்டுமான வசதிகளைச் செய்யமுனைந்தது. ஆனால் அது முழுமை பெறவில்லை. இதனைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அபிவிருத்தியாகக்காட்ட முனைகின்றனர். 

அதேசமயம், எமதுஅபிவிருத்தி என்பது வேலைவாய்ப்பை மையப்படுத்திய அபிவிருத்தியாக அமைய வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ அனைவருக்கும் அரச உத்தியோகங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாது. ஆகவே, வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு இருக்கின்றது. வேலைகளை உருவாக்குவதாக இருந்தால், பல்வேறுபட்ட தொழிற்சாலைகளை இங்கு நிர்மாணிப்பதனூடாக அத்தகைய வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். ஒருநாட்டின் அபிவிருத்தி என்பது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளமக்களை மத்திய தரவகுப்பை நோக்கி நகர்த்துவதாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் வடக்கு-கிழக்கில் பாரிய முதலீடுகளை செய்து தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது முதலாவது விடயம். வடக்கு-கிழக்கில் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா என்பது இரண்டாவது விடயம். இத்தகைய சூழ்நிலையில்இ, புலம் பெயர்ந்துவாழ்கின்ற பதினைந்து இலட்சம் தமிழ் மக்களில் ஒருசில நூறு பேர் வடக்கு-கிழக்கில் முதலீடுகளை மேற்கொண்டாலே ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும். அதேபோல் தமிழகத்தின் தொழிலதிபர்கள் பலர் வடக்கு-கிழக்கில் முதலீடு செய்யவிரும்புகின்றார்கள். இவர்களை ஊக்குவிக்கக்கூடியவகையில், மாகாணசபைகளுக்கு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஒரு புறத்தில் மாகாணசபையினரும் மறுபுறத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வேலைவாய்ப்பை மையமாகக்கொண்ட அபிவிருத்திகளைச் செய்வதென்பது காலத்தின் தேவையாகும். அதேசமயம், ஆட்சியாளர்களுக்கு எடுபிடிகளாக இருக்கக்கூடிய சில அமைச்சர்கள் வேலைவாய்ப்பு என்பதைக் கூறியே இளைஞர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றார்கள். இதன் மூலம் தமிழ்த் தேசிய நீக்கித்திற்கு வழிசமைக்கின்றனர். ஆகவே, தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்அதேசமயம், வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட அபிவிருத்தி தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.