பருவமழை காரணமாக ஆற்று நீர் பெருக்கெடுப்பினால் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷின் வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜூன் 30 ஆம் திகதியிலிருந்து வெள்ளப் பெருக்கு ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் 62 ஆக உயர்வடைந்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்க உயர் அதிகாரி ஆயிஷா அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.

51 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், ஏழு பேர் மின்னல் தாக்கியும், மூன்று பேர் பாம்பு கடியினாலும்,  ஒருவர் சுத்தமான குடிநீர் இல்லாதமையினால் உண்டான வயிற்றுப் போக்குக் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் 64 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பிராந்தியங்களில் சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆயிஷா அக்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுமார் 2.25 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 20,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் வியாழக்கிழ‍ைமை பங்களாதேஷின் பேரழிவு மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எனமூர் ரஹ்மான் கூறினார்.

பங்களாதேஷின் வெள்ள கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஷா முஹம்மது நாசிம், அரசாங்கம் தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.