(நா.தனுஜா)

சமூகமட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் அர்ப்பணிப்பான சேவை மிக முக்கியமானதாகும். எனவே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் செயற்பாட்டில் முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு அவர்களின் நேர்மறையான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான அடிப்படை வசதிகள் இல்லாமை, தொற்றுநோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை வழங்காமை, தான்தோன்றித்தனமாக அரசியல் பிரசாரக்கூட்டங்களை நடத்துதல் போன்ற காரணங்களை முன்வைத்து நேற்று  நண்பகல் 12 மணியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துப் பணிகளிலிருந்தும் அனைத்துப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களும் விலகினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துவெளியிட்டிருக்கும் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது:

பொதுத்தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்ச்சியான வலியுறுத்தல்களின் பின்னர் வெளியிடப்பட்டிருக்கிறது. நாட்டுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக உரிய அதிகாரிகள் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளவற்றை முறையான அமுல்படுத்துவது முக்கியமானதாகும்.

அதேபோன்று சமூகமட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் அர்ப்பணிப்பான சேவை மிக முக்கியமானதாகும். எனவே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் செயற்பாட்டில் முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு அவர்களின் நேர்மறையான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் இலங்கை அரசியல் பங்கேற்பு பெரிதும் உறுதிசெய்யப்படாத ஒரு குழுவாகவே பெண்கள் சமுதாயம் காணப்படுகின்றது. அரசியலின் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆளுகைக்கு அர்த்தத்தையும், சமநிலையையும், பன்முகத்தன்மையையும் அளிக்கும். அது பெண்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.