Published by T. Saranya on 2020-07-18 17:32:10
(செ.தேன்மொழி)
குருநாகல் இராசதானிக்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அரச மண்டபத்தை இடித்து சேதம்படுத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் , இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் வகையில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது.
குருநாகல் நகரத்தில் அமைந்துள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னனுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அரச மண்டபமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாள் இன்று சனிக்கிழமை குருணாகல் நகரில் ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின்பண்டார , அசோக்க அபேசிங்க உள்ளிட்ட பலரும் , தேரர்களும் , பிரதேசவாசிகள் பலரும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன், உடைக்கப்பட்ட மண்டபத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆர்பாட்டகாரர்கள், 'எமது உரிமைகளை பாதுகாக்க மக்களே முன்நோக்கி வாருங்கள்' ,'ஜனாதிபதி அவர்களே செவிமடுங்கள் எமது உரிமைகளை பாதுகாத்து தாருங்கள்',' 'பொய்மையான ஆணைக்குழு எமக்கு தேலையில்லை' என்று கோசம் எழுப்பியதுடன், 'ஜனாதிபதி பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்','தேசப்பற்றுள்ள 69 இலட்சம் போரும் எங்கே?','இப்போது நலமா?' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பின்னர் ஆர்பார்ட்ட காரர்கள் அனைவரும் கோசங்களை எழுப்பியவாறு குருநாகல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதுடன். கட்டிட உடைப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு முறைபாடும் அளித்தனர்.
இதன்போது சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முறைபாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்பாட்டதார்களுக்கு பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்துச் சென்றனர்.