காணாமல் போனோர் தொடர்பிலான பதிவுகளை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள அலுவலகம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஒரே நாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும் என மஹிந்த அதரவு அணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 

இந்த அலுவலகம் மூலமாக சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு தேவையான வகையில் ஆதாரங்களை மாற்றியமைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மஹிந்த ஆதரவு அணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

இறப்புகளின் பதிவுகள் சட்டமூலம் என்ற பெயரில் அரசாங்கம் காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகம் ஒன்றை உருவாக்கும் வகையில் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. எனினும் இந்த வகையிலான சட்டமூலங்களை கொண்டுவருவது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். 

வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் வகையில் சட்டமூலம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால்  அதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு என்ற தனி சட்டம் ஒன்றும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு என வேறுவிதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படும்.  

ஐக்கிய இலங்கைக்குள் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  எனினும் இரண்டு நாடுகள் என்ற வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது.  அதேபோல் இந்த சட்டமூலத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

மேலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு காணாமல் போனோர் பதிவுகளை மேற்கொள்ளும் அலுவலகம் அமைக்கப்பட்டால் அதனூடாக சர்வதேச நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளினதும் பிரிவினைவாதிகளினதும் நேரடியான தலையீடு ஏற்படும்.  இதன் மூலம் எமது நாட்டிலும் புலம்பெயர் அமைப்புகளின் நேரடியான தலையீடுகள் ஏற்படும். இப்போதும் சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் எமது நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய விடயத்தில் அக்கறை இன்றியே செயற்படுகின்றது என்றார்.