(எம்.மனோசித்ரா)

பேராயர் பதவியை அல்லது தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடுத்தப் போவதில்லை என்று பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவரது அனுமதியும் விருப்பமும் இன்றி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை அரசியல்வாதியொருவர் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே பேராயர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தெளிவுபடுத்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் பிரசார கையேடுகளிலும் எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த வேட்பாளர்கள் ஆரம்பத்தில் என்னை சந்திப்பதற்காக வருகை தந்த போது என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையே இவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.  

இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் என்னுடைய அனுமதியையோ அல்லது விருப்பத்தினையோ இவர் பெறவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னை அல்லது பேராயர் பதவியை எவ்வித அரசியல் கட்சி அல்லது அரசியல் குழுவுடன் கட்சி அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றேன்.

தமது மனசாட்சியின் பிரகாரம் தாம் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் காணப்படுகிறது. இந்த ஜனநாயக உரிமையை எதற்காகவும் நீக்கிக் கொள்ளத் தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.