வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்  தமிழ் மக்கள் கடந்த ஐந்து வருட காலத்தில்   ஆதாவது 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தின் அனுபவத்திலிருந்து இனிவருகின்ற ஐந்து வருடத்திற்கான வாக்கினை அளிக்க வேண்டும் என  கேடயச்சின்னத்தில்  சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் மு. சந்திரகுமார்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தில்  மக்கள் வெறுமைக்குள் வாழ்ந்துள்ளனர். இக் காலத்தில்தான் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு அரசுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் மக்களை கண்டுகொள்ளவே இல்லை. கொள்கை கொள்கை எனத் வார்த்தைக்கு வார்த்தை கூறியவர்கள் கொள்ளையடித்தார்களே தவிர  கொள்கையினை கடைப்பிடிக்கவில்லை, மக்களின்  கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.  எனத்  தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள்  மக்களின் வாழ்க்கையினை முன்னேற்றுவதற்கு பதிலாக தங்களை முன்னேற்றிக்கொண்டார்களே  தவிர கடந்த ஐந்து வருடத்தில் வேறு எதுவும் இடம்பெறவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் காலங்களில் மக்கள் முன் வரும் போது தங்களுடைய கடந்த காலத்தில் தங்களால்  மக்களுக்கு செய்யப்பட்ட பணிகளை சொல்லி  எதிர்காலத்திற்கான ஆதரவை  கோரவேண்டும்.  ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் குறிப்பாக எங்கள் மண்ணில் இந்த நிலைமை இல்லை. மேடைகளில் எதிர்தரப்பினர்கள் மீது அவதூறுகளை வாரி  இறைத்துவிட்டு இறுதியில் எனவே எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றனர். கிளிநொச்சியில் இது மிக மோசமாக அநாகரீகமாக இடம்பெற்று வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாகரீகமற்றவர்களை நிராகரிக்க வேண்டும்.

சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, மக்களின் முன்னேற்த்தில் அக்கறையாக உள்ள வினைத்திறனான மக்கள் பிரதிநிதிகளை தங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.