(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதுடன் பாடசாலைகளுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குமாக 10 மில்லியன் முகக்கவசங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அதுமாத்திரமன்றி பி.பி.ஈ சுயபாதுகாப்பு அங்கிகளை மக்களும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் எமது நாட்டிலேயே அவற்றைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கும், 2000 செயற்கை சுவாசக்கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது கொரோனா வைரஸ் பரவலும், பொருளாதார நெருக்கடியுமே நாட்டில் காணப்படும் மிகப்பிரதானமான பிரச்சினைகளாகும். கொரோனா வைரஸ் இன்னமும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்தாமல் நாடு என்றவகையில் நாம் முன்நோக்கிச்செல்ல முடியாது. அதேபோன்று மற்றொரு புறத்தில் கொவிட் - 19 பரவலால் உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எமது நாடும் முகங்கொடுத்திருக்கிறது. எனினும் அரசாங்கத்தினால் இதற்குத் தீர்வுகாண முடியவில்லை. எதிர்வரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஆட்சியமைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே எமது மிகமுக்கிய இலக்காக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க கடந்த ஜனவரி மாதம் தொழில்வாய்ப்பொன்றைக் கொண்டிருந்தவர்கள் கூட தற்போது வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அவ்வாறு சுமார் 10 இலட்சம்பேர் வரையில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலையேற்படும். எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேவேளை அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் பாரிய வணிகங்கள் மற்றும் வியாபாரங்களை மேம்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவதோடு தனியார்துறையினர், ஏற்றுமதி, ஆடையுற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றையும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அடுத்ததாக தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் முக்கிய சவாலாக கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்றது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களையும் நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியிருக்கிறோம். அதன்படி நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதுடன் பாடசாலைகளுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குமாக 10 மில்லியன் முகக்கவசங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதுமாத்திரமன்றி பி.பி.ஈ சுயபாதுகாப்பு அங்கிகளை மக்களும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் எமது நாட்டிலேயே அவற்றைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கும், 2000 செயற்கை சுவாசக்கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும் நாமனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒரே நாடாக ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவமே மிகவும் முக்கியமானதாகும். அந்தவகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நாட்டுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். 225 பேரையும் தியவன்ன ஓயாவிற்குள் தள்ளவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு செய்தால் ஏற்படத்தக்க சூழல் மாசடைவைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எனவே அதனையும் தவிர்க்கும் வகையிலேயே இம்முறைத் தேர்தலில் புதிய வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறோம். எனவே நாட்டுமக்கள் நன்கு சிந்தித்து தமது வாக்குகளை அளிக்கவேண்டும் என்றார்.