(செ.தேன்மொழி)

குருணாகல் பகுதியில் புராதன சிறப்புரிமை மிக்க கட்டத்தை இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பெறுமதி மிக்க இடங்களை விற்பனை செய்து அதில் கிடைக்கப் பெறும் பணத்தை கைப்பற்றுவதையே நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் குருணாகலையில் புராதன சிறப்பு மிக்க மண்டபமொன்று இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால ஆட்யின் போது கொழும்பு பகுதிகளில் காணப்பட்ட சிறப்புமிக்க இடங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், அந்த இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது இந்த நிலைமை குருணாகலையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ , பிரமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் உரிய நேரத்தில் சம்பவஇடத்திற்கு சென்று அவர்கள் விசாரணைகளை நடத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ணான்டோவின் பேச்சுக்கு கட்டுப்பட்டே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றார். 

இவர்கள் இருவரினதும் அரவணைப்பில் இருப்பவர்தான் குருநாகல் நகரசபையின் தலைவர். அவருக்கு தெரியாமல் இந்த கட்டித்தை இடிப்பது என்பது சாத்தியமற்றதே. அதனால் இது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை நடத்தி சம்பத்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை இதற்கு எதிராக அஸ்கிரிய -மல்வத்து பீடத்து மாநாயக்க தேரர்கள் தங்களது கருத்தை தெரிவிப்பதுடன். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும். 

எமது ஆட்சிகாலத்திலே இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க சமத்தலங்கள் மற்றும் விகாரகைளின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியுள்ளோம். எங்களை கைதுசெய்வதற்கு குறுகிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்த அரசாங்கம். புராதான சிறப்பு மிக்க கட்டிடமொன்றை இடித்துள்ள நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?