மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்து வருகின்ற நிலையில், வெவ்வேறு இடத்திலுள்ள இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான மலாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார்.  ஐந்து பேர் காயம் அடைந்தனர்.  சம்பவ பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  இதனால் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மும்பையில் துறைமுக பகுதியில் உள்ள பானுஷாலி என்ற கட்டிடம் நேற்று கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.  இதில் கட்டிடத்தில் இருந்த பலர் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து, மீட்பு குழுவினர் மீட்பு பணியை இன்று தொடர்ந்தனர்.  இதில், பானுஷாலி கட்டிட விபத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.