கொரோனாவுக்கு தமிழர்கள் பயந்து வாக்களிக்காதுவிட்டால் எமது எதிர்காலம் இருளாகிவிடும்  -  விக்கினேஸ்வரன்

Published By: Digital Desk 3

17 Jul, 2020 | 03:44 PM
image

வடக்கு கிழக்கில் பல்வேறு விதமாக சிங்கள மயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தக்க கொள்கைகளுடன் செயலாற்றும் வேட்பாளர்களை தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் கடந்த 5 வருடங்களில் தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தது போலவே  வருங்காலத்தில் பாதிப்படையும். எனவே மக்கள் நோய்க்குப் பயந்து வாக்களிக்காது இருந்தால் தமிழ் மக்களின் வருங்காலம் இருள் சூழ்ந்ததாய் ஆகிவிடும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்.

இம் முறை பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. ஆகவே இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது,  அதன் போது பல சிக்கல்களுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும். தற்போது எம் மக்களின் மனதில் பயத்தை ஊட்டவல்லதாக இருப்பது எம் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டுவரும் இராணுவப் பிரசன்னமே. பல வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள் செல்கின்றார்கள். அங்கு அவர்கள் வேட்பாளர்களின் இதுவரையான பயணங்கள் இனிப் போகப் போகும் இடங்கள், கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள இடங்கள் போன்ற பல விபரங்களை குறித்துக் கொண்டு செல்கின்றார்கள் என்று தெரியவருகின்றது. இதனால் வேட்பாளர்கள் பயத்தில் இருக்கின்றார்கள் என்று கேள்வி.

இவ்வாறான செயல்கள் மக்களை வாக்களிக்கச் செய்யவிடாது. அதுமட்டுமல்ல. பாதைகளில் பல வீதிச் சோதனைச் சாவடிகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜுலை 5ந் திகதி தேர்தல் ஆணையகத்தின் கிளிநொச்சி தேர்தல் அலுவலர் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்த போது இரு தடவைகள் நிறுத்தப்பட்டார். அவரின் மோட்டார் சைக்கிள் பின் பெட்டியைத் திறக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். தேர்தல் ஆணையக அதிகாரிக்கு இந்த நிலை என்றால் பொது  மக்களின்  பாடு எவ்வாறிருக்கும் என்று யூகிக்க முடியும். இத்தனைக்கும இவ்வாறான அதிகாரம் பொலிசாருக்கே உண்டு. இராணுவத்தினருக்குக் கிடையாது. அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே இராணுவத்தினருக்கு இவ்வாறான அதிகாரங்கள் வந்து சேருவன.

கொரோனா காரணத்தினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே மக்களும் அதிகாரிகளும் மீண்டும் பயத்தில் வாழத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் பயம் தேர்தலைப் பாதிக்கக்கூடும். 2013ல் நான் வடமாகாணசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் காலத்தில் அரசாங்க சார்பு வேட்பாளர்களின் நன்மைக்காக அரச வளங்களை திட்டமிட்டு தவறான முறையில் பயன்படுத்தினார்கள். அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக்கூறி தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. பல வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் ஆளானார்கள். இவ்வாறு தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டன. ஜனநாயகம் இந் நடவடிக்கைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. காலை வெகு நேரம் வரையில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குப் போகாது போவதைத் தவிர்த்தனர். அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவாளர்கள் சட்டத்திற்குப் பயப்படாமல் குடா நாடு எங்கும் வலம் வந்தார்கள். வாக்குகளைச் சிதறடித்து தமிழ் மக்கள் சார்பான கட்சிகள் வெற்றியீட்டுவதைத் தவிர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அப்படி இருந்தும் மக்கள் மிகச் சாதுர்யமாக வாக்களித்து என்னை 133,000க்கு மேலான வாக்குகளைப் பெறச் செய்து வெற்றி எய்திக் கொடுத்தார்கள். இன்று அன்றைய அரசாங்கமே மீண்டும் வந்துள்ளது. அதுவும் அன்று இராணுவத்தை வழிநடத்தியவர் இன்றைய ஜனாதிபதி.இம்முறை கொரோனா வேறு வந்துவிட்டது. மக்கள் நோய்க்குப் பயந்து வாக்களிக்காது இருந்தால் தமிழ் மக்களின் வருங்காலம் இருள் சூழ்ந்ததாய் ஆகிவிடும். ஏற்கனவே பல விதங்களில் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தக்க கொள்கைகளுடன் செயலாற்றும் நேர்மையுள்ள,பயப்படாத வேட்பாளர்களை எமது மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் சென்ற 5 வருடங்களில் தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தது போலவே மேலும் வருங்காலத்தில் பாதிப்படையும்.

ஆகவே நாங்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இராணுவத்தை முகாம்களில் முடக்குமாறு கோரவிருக்கின்றோம். சட்டம் ஒழுங்கின் பாதுகாவலராய் பொலிசாரை நியமிக்குமாறும் இராணுவத்தினரை திரும்ப எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரவிருக்கின்றோம். தேர்தல்களின் போது சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவதை சட்டரீதியாக நியாயப்படுத்தமுடியாது. நாட்டின் உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிசாருக்கு அரசியலமைப்பு மூலமான கடமை உள்ளது. அதுவும் தேர்தல்களின் போது அவர்களுக்கு பல கடப்பாடுகள் உண்டு. ஆகவே பொலிசாரின் செயற்பாடுகளை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் கோரவிருக்கின்றோம்.

அத்துடன் தேர்தல் ஆணையகம் சகல பாதுகாப்பு பணிகளையும் பொலிசார் மூலம் செய்ய வேண்டிய ஒரு கடப்பாடுடையது. இதையும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கின்றோம். அதற்காகப் பொலிசார் மீது மக்களுக்குப் பெருமளவு நம்பிக்கை உள்ளதாகக் கொள்ளக்கூடாது. தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்புப் படைகள் மீது பரந்தளவில் அவநம்பிக்கையும் பயமும் இருப்பது போலவே பொலிசார் மீதும் அவநம்பிக்கை உண்டு. ஆகவே இப்பொழுதிருந்தே மக்கள் தம்மை தேர்தல்களுக்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தப்படும் நாளில் வாக்குரிமை இருக்கும் யாவருமே வாக்குச் சாவடிகளுக்கு கொரோனா முகமூடி அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியைப் பாதுகாத்துக் கொண்டு மீன் சின்னத்திற்கு முதலில் வாக்களிக்க வேண்டும். அதன்பின் 1 தொடக்கம் 10 வரையிலான இலக்கங்களில் உங்களுக்கு விருப்பமான மூன்று இலக்கங்களுக்கு அடையாளம் இடவேண்டும். அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கை சிங்கள ஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்