ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை தடைசெய்வது குறித்து ஆலோசித்து வருகின்றது.

இது ஏற்கனவே பதற்றமடைந்துள்ள சீன மற்றும் அமெரிக்க உறவுகளை மேலும் பாதிப்படையச் செய்யும் என அந் நாட்டு அதிகாரியொருவர் சர்வதேச ஊடகங்களிடம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சிரேஷ்த அதிகாரிகள் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். எனினும் இந்த விடயம் இன்னும் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

இரு நாடுகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றத்தினால் பல்லாயிரக்கணக்கான சீனர்களுக்கு விசா மறுக்கப்படலாம் என நியூயோர்க் டைம்ஸ் முதலில் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

எனினும் பீஜிங்குடனான ஒரு பரந்த சண்டையில் மேற்கண்ட தீர்மானத்தினை சிலர் புதிய பனிப்போருடன் ஒப்பிட்டுள்ளனர். 

அத்தகைய தடை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை மிக உயர்ந்த மட்டத்திலிருந்து அதன் அடிப்படை மட்டம் வரை பாதிக்கும்

மேலும் சீனாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு எதிராக பதிலடி கொடுப்பது உறுதியாகும். இது இராஜதந்திரிகள் மட்டுமல்லாமல் வணிக நிர்வாகிகளையும் உள்ளடக்கியது, இது சீனா மற்றும் அமெரிக்க உறவுகளில் மேலும் தீங்கின‍ை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இது பரிசீலனையில் இருப்பதை உறுதி செய்வதை நிறுத்தி விட்டார், எனினும் ஜனாதிபதியின் (ட்ரம்ப்) வழிகாட்டுதலின் கீழா, சீன கம்யூனிஸ்ட் கட்சியை எவ்வாறு பின்னுக்குத் தள்ளுவது என்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை "மோசமான ஒன்று" எனக் கூறியுள்ளார்.

சீனா கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும், தென் சீனக் கடலில் ராணுவக் கட்டமைப்பு, சீனா சிறுபான்மை முஸ்லிம்களை நடத்தும் விதம், அதீத வர்த்தக உபரிகள் ஆகியவை தொடர்பாக சீனா மீது டிரம்ப் விமர்சனங்களை வைத்து வருகிறார்.