(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரானாவுடன் அரசாங்கம் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு மக்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் எத்தனை கட்சிகள் உறுவாகினாலும் மத்திய கொழும்பை ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிகொள்ளும் என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ. ஷரப்தீன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி காெழும்பு மாவட்ட வேட்பாளர் முஹமட் பைரூஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பு மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 60பேரில் 53பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவளிக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி அமைத்திருப்பவர்களுடன் எமது 4பேர் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அவர்களின் இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்யுமாறு கட்சி தலைவருக்கு தெரிவித்திருக்கின்றோம்.

அத்துடன் வரலாறு தொற்றும் ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பில் தோல்வியுற்றதில்லை. இந்தமுறையும் நாங்கள் வெற்றிபெறுவோம். துராேகிகளுக்கு மத்திய கொழும்பு மக்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி சிறந்த பாடத்தை புகட்டுவார்கள். மத்திய கொழும்பின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தில் இருக்கும்  கொழும்பு மாநகரசபையை மேற்கொண்டுவருகின்றது. அதனால் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரான பைரூஸ் ஹாஜியாரை மக்கள் வெற்றியடையச்செய்ய முன்வரவேண்டும். 

மேலும் கொராேனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலே தேர்தல் இடம்பெறுகின்றது. அரசாங்கம் கொராேனா வைரஸ் தொடர்பான உண்மை தகவல்களை மக்களுக்கு மறைக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. வேட்புமனு தாக்கல் செய்யும்வரை நாட்டை முடக்காமல் இருந்த ஜனாதிபதி, வேட்புமனு நிறைவடைந்த மறுதினமே நாட்டை முடக்கினார். ஐக்கிய தேசிய கட்சியின் பிளவை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளவதற்கே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டது. 

அதேபோன்று விமான நிலையத்தை மூடிவிட்டு நாட்டை பாதுகாக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்தும் ஜனாதிபதி அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, கொராேனா நோயாளர்கள் இனம் காணப்பட்ட பின்னரே விமான நிலையத்தை மூடிவிட தீர்மானித்தார். அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாகவே நாட்டில் கொராேனா தொற்றாளர்கள் அதிகரிக்க காரணமாகும். அதனால் அரசாங்கம் கொராேனாவுடன் அரசியல் செய்து, மனித உயிர்களுடன் விளையாடாமல் மக்களை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.