(செ.தேன்மொழி)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள மதிலுக்கு அருகில் சிறைச்சாலைக்குள் தடைச் செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 18 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை பெண்கைதிகள் பிரிவின் மதிலுக்க அருகில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் இருப்பதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த பொதிகளிலிருந்து 36 தொலைபேசிகள் , 20 சிம்கார்ட்கள் , 264 பெட்டரிகள் , ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் , வெற்றிலை , புகையிலை ,  சவற்காரங்கள் , வாசனைத்திரவியங்கள் , ஆடைகள்  உள்ளிட்ட பல தடைச் செய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த தடைச் செய்யப்பட்ட பொருட்களை வெளி நபர்களே சிறைக்குள் வீசியுள்ளனர். சிறைச்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தடைச் செய்யப்பட்ட பொருட்களை கண்டறிவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதுடன்,தற்போது வெளிநபர்களால் இவ்வான பொருட்கள் திட்டமிடப்பட்ட நிலையில் சிறைச்சாலைக்குள் வீசப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதுடன், மீட்கப்பட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.