கடந்த காலத்தில் பலருக்கு வாக்களித்திருப்பீர்கள் அதன் மூலம் பலத்த ஏமாற்றம் உங்களுக்கு இருந்திருக்கும். எனினும் பத்தில் ஒன்றாக எம்மை நினைக்க வேண்டாம் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியா மெனிக்பாம் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் காலத்தில் உங்களுடைய வாக்குகளை அபகரிப்பதற்காக பலர் வருவார்கள். வாக்குகளை அபகரிப்பது தான் அவர்களின் நோக்கம். நாங்கள் எதைசொல்லுகின்றோமோ அதை செய்கின்றவர்கள். செய்கின்றதையே சொல்லுகின்றவர்கள். அந்தவகையில் நீன்டகாலத்திற்கு பிறகு நான் இங்கு வந்திருக்கின்றேன்.

1977 ஆம் ஆண்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களை தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக மெனிக்பாம் மற்றும், டொலர்பாமில் மீள்குடியேற்றம் செய்திருந்தோம். அதன் பின்னர் மீண்டும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது இளம் சமுதாயத்தினர் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ளனர். 

அவர்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்துள்ளேன். அந்தவகையில் இனிவரும் காலங்களில் நீங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளிற்கு நிச்சயம் தீர்வு காண்போம்.

உங்களது பிரதேசசபை தொடர்பாக தெரிவித்திருந்தீர்கள் அந்த பிரதேசசபையை நீங்கள் வாக்களித்து தெரிவு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

எனவே நீங்கள் வாக்களித்து தெரிவு செய்தவர்கள் உங்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டும் ஆனால் அவர்கள் உங்களது பிரச்சனைகளை தீர்க்கவில்லை. 

கடந்த காலத்தில் பலருக்கு வாக்களித்திருப்பீர்கள் அதன் மூலம் பலத்த ஏமாற்றம் உங்களுக்கு இருந்திருக்கும்.பத்தில் ஒன்றாக எம்மை நினைக்க வேண்டாம்.

நாம் அதில் இருந்து வேறுபட்டவர்களாக மக்களின் பிரச்சினையை தீர்க்கின்ற வகையில் அணுகுவதுதான் ஈபிடிபியின் வரலாறு. மாறாக பிரச்சனைகளை தீராத பிரச்சனையாக வைத்திருப்பவர்கள் நாம் அல்ல.

நீங்கள் எங்களை நம்புங்கள், அணிதிரளுங்கள் அதன் மூலமாக நாங்கள் உங்களை பாதுகாத்து கௌரவமான எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்வோம். 

இதற்காக ஐந்து பத்து வருடம் செல்லும் என்று நான் கூறமாட்டேன். நீங்கள் வரவுள்ள தேர்தலை சரியாக பயன்படுத்துவீர்களேயானால் ஒருசில வருடங்களுக்குள் உங்களது அரசியல், அபிவிருத்தி, அன்றாட பிரச்சனைகளிற்கான தீர்வுகளை நாங்கள் நிச்சயம் பெற்றுதருவோம். 

வேலைவாய்ப்பு என்பது உங்களது கிராமங்களில் அல்லது அண்டிய கிராமங்களில்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பலநூறு மைல்கள் கடந்து செய்வதால் எந்த பயனும் இல்லை. கடந்த காலத்தில் அவ்வாறான சூழலில்தான் நீங்கள் இருந்திருப்பீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது நீங்கள் வாழ்கின்ற பகுதிகளில் உங்களிற்கான வேலைவாய்ப்பை பெற்றுதருவோம் என்றார்.