(எம்.மனோசித்ரா)

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பொது மக்கள் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு சுகாதார அமைச்சின் கீழ் விஷேட பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருக்கும் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மீளாய்வுக்குழு இன்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கூடியது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மீளாய்வுக்குழு சந்திப்பு தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,

போக்குவரத்து , மருந்தகங்கள் , விற்பனை நிலையங்கள் , வைத்தியசாலை மற்றும் வேலைத்தளங்களில் கட்டாயம் பேணப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று ஆராயந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் போது பி.சி.ஆர். பரிசோதனை நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இவ்வருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 527 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொரளையில் அமைந்துள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (எம்.ஆர்.ஐ.) 36 ஆயிரத்து 101 என்ற அதிகளவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 22 மருத்துவ பரிசோதனை நிலையங்களில் நாளொன்றுக்கு 2500 ஐ அதிகளவான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏப்ரல் முதல் இது வரையில் சமூகத்தினுள் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் 27 912 பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளில் 392 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க , சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க , பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன உள்ளிட்ட மீளாய்வுக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.