(இராஜதுரை ஹஷான்)

மின்சார கட்டணத்தை செலுத்துவதில்  நிவாரணம் வழங்குவதால் அரசாங்கத்திற்கு  3 பில்லியன்   நட்டம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது ஒருபோதும் சுமத்த மாட்டோம். மக்கள் மத்தியில் இருந்து அரசியல் செய்வதால் மக்களின் கஷ்டங்களை எம்மால் புரிந்துக் கொண்டு அதற்கு தீர்வு வழங்கவும் முடியும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 ஜனாதிபதி  தேர்தலின் வெற்றியை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆதரவு இல்லாமல் அரச நிர்வாகத்தை  முன்னெடுக்கின்றோம். அரசியலமைப்பின்  19வது  திருத்தமும், கொவிட்-19 வைரஸ் தாக்குதலும் பொதுத்தேர்தலை பிற்போடச் செய்துள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பலமான அரசாங்கம் ஒன்று தோற்றம் பெறுவது அத்தியாவசியமானது.

 2015ம் ஆண்டு நான்  ஜனாதிபதி தேர்தலில் தோல்விடைந்தேன். பின்னர் மக்களின் அழைப்பினால்  மீண்டும் அரசியலில் செல்வாக்கு செலுத்தினேன் .  குறிப்பிட்ட காலப்பகுதியில்  பலமான எதிர்க்கட்சியாக  செயற்பட்டமையினால்  அரசாங்கம்  முன்னெடுத்த முறையற்ற செயற்பாடுகளை தவிர்க்க முடிந்தது. கடந்த  அரசாங்கத்தில்  ஜனாதிபதி  சிறிசேன  குறிப்பிட்டதை பிரதமர் ரணில்  கேட்கவில்லை. இவ்விரு தரப்பினரையும் அப்போதைய அமைச்சரவை  மதிக்கவில்லை. இதனால்  நாட்டில் பலவீனமான  அரசாங்கம் செயற்பட்டது. இறுதியில்  விளைவை மக்கள் எதிர்க் கொண்டார்கள். ஜனாதிபதி  குறிப்பிடும் விடயங்களை   பிரதமரும்,  அமைச்சரவையும் செயற்படுத்த வேண்டும்  ஏனெனில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்டவராக ஜனாதிபதி செயற்படுகிறார். இடம் பெறவுள்ள  பொதுத்தேர்தலில்  இவ்வாறான  இணக்கப்பாடான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

 கொவிட் -19 வைரஸ்  தாக்கத்தை கட்டுப்படுத்த  ஊரடங்கு சட்டம்  நாடு தழுவிய ரீதியில்   அமுல்படுத்தப்பட்டது. இவ்வேளையில்  மக்களின் வாழ்க்கை தேவைகளுக்காக பல முறை 5000ம் ரூபா வழங்கப்பட்டது. ஊரடங்கு  சட்டம் இரத்து செய்யப்பட்டதன் பின்னர் மின்சார   கட்டணம் தொடர்பில்  மக்கள் பிரச்சினைகளுக்க முகம் கொடுத்தார்கள். முன்னர் 5000 மாக செலுத்திய  மின்கட்டணம் 9000மாக செலுத்த வேண்டிய  நிலை ஏற்பட்டது.

  பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி  குறிப்பிட்தை தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மின்கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்தவே முதலில் தீர்மானிக்கப்பட்டது.  பின்னர்  அதனையும் செலுத்த மக்கள்  மத்தியில் வசதியில்லை என்பதை  தெரிந்த பின்னர்  பெப்ரவரி மாதத்தில் இருந்து வெளியாகிய கட்டணங்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க  அரசாங்கம் தீர்தானித்தது.

 மின்சார  கட்டணங்களுக்கு  நிவாரணம் வழங்குவதால் மாத்திரம் அரசாங்கத்துக்கு 3 பில்லியன்  நிதி நட்டமடைகிறது. பொருளாதர நெருக்கடி நிலையில்  அதன் சுமைகளை மக்கள் மீது சுமத்த தீர்மானிக்கவில்லை.  இத்தீர்மானத்தினால்  மக்கள்  நன்மையடைவார்கள்.  மக்கள் மத்தியில் இருந்து அரசியல்  செய்வதால் அடிமட்ட  கஸ்டங்களை  எம்மால் புரிந்துக் கொள்ள முடியும் என்றார்.