1000 ரூபா என்பது அரசியலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு  - வேட்பாளர் எம். சந்திரகுமார்

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 04:32 PM
image

1000 ரூபாதான் சம்பளமா அதற்கு மேலான தொகையா என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். 1000 ரூபா என்பது அரசியலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கே தவிர, 1000 ரூபா என்பதே இறுதியல்ல. எனவே அதற்குரிய நியதிகளை உருவாக்கி சம்பள பிரச்சினையை தீர்க்க வேண்டுமென தோட்டத் தொழிலாளியின் பிள்ளையும் ஆசிரியரும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் பாராளுமன்ற வேட்பாளருமான எம். சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட மக்கள் சிங்களத் தலைவர்களை உருவாக்குவதற்கு தூண்டப்பட்டதற்கான காரணம் என்ன?

எங்களுக்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்கள். அவர்களுடைய கரிசணை, அதிக கவனம் இந்த மாவட்டங்களில் இருக்கவில்லை. அவர்கள் தலைமைத்துவத்தை சரியாக வழங்கியிருந்தால் எங்களுடைய மக்கள் பெரும்பான்மையினத்தை நோக்கி நகர்ந்திருக்க மாட்டார்கள். இன்று அவர்களுக்கொரு சக்தி கிடைத்திருக்கின்றது. தமிழ்முற்போக்கு கூட்டணியாக நாங்கள் செய்திருக்கின்ற அபிவிருத்திகள், போராட்டங்கள் என்பவற்றின் மூலம் மக்களுடைய அச்சத்தை போக்கியிருக்கின்றோம். சம்பளவிடயம் மற்றும் ஏனைய உரிமை பிரச்சினைகளில் நாங்கள் களத்தில் இறங்கி போராடியிருக்கின்றோம். இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த வருடம் கசிப்பு உற்பத்திக்கு எதிராக போராடிய ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டான். அந்த இளைஞனுக்காக நீதி வேண்டி, பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். அந்த போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக பல தலைவர்கள் போராடியிருக்கின்றார்கள். இன்று மக்கள் நம்பிக்கையோடு வெளியில் வந்து வாக்களிப்பதற்கு உரிமையை பாதுகாப்பதற்கு தலைவர்கள் இருக்கின்றார் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கின்றோம். 

கடந்த 10 வருடங்களாக எமது மக்களுக்கு உரிய தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றேன். அதுபோல ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும்போது இன்னும் இம்மக்களை பாதுகாத்து மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். இம்மக்களுக்கு இளைஞர்கள் ஒரு நம்பிக்கையை கொடுத்தால் அவர்கள் பெரும்பான்மையினத் தலைவர்களை நோக்கி நகர்வதை தடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

மிக நீண்டகாலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதிலுள்ள தடை என்னவென்று நினைக்கின்றீர்கள்?

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் பல தடைகள் இருக்கின்றன. குறிப்பாக எமக்கு தலைமைத்துவத்தை கொடுத்த தலைவர்கள் அந்த பிரரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அடித்தளத்தை இடவில்லையென்பது பிரதான குறைபாடு. கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களை கவனத்தில் கொண்டதுபோல் இரத்தினபுரி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளாதது குறைபாடாக இருந்தது. நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஒன்றினைந்துள்ளபோது அந்த தலைமைத்துவமும் சக்தியும் கிடைத்திருப்பது வரவேற்கக்கூடிய ஒரு விடயம். இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் வாக்காளர்களின் தொகை குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி 72,000 வாக்காளர்கள் அளவிலேயே காணப்படுகின்றனர். இன்னும் பதிவு செய்யப்படாத வாக்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் பதிவு செய்வதையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

தற்போது இருக்கக்கூடிய குறைந்த வாக்குகளுக்கும் பல கட்சியைச் சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியிடுவதும் ஒரு குறைபாடாகும். கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக 30 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொண்ட போது ஆளுங்கட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், 5000 வாக்குகளை பெற்றுக்கொண்டார். அது எங்களுடைய வெற்றிக்குத் தடையாக இருந்தது. ஆனால் இம்முறை அத்தடை இல்லை. அகற்றப்பட்டிருக்கின்றது. தேர்தல் காலங்களில் இரத்தினபுரி போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் கூட வாக்களிப்பு வீதத்தை குறைத்திருக்கின்றது. தற்போது இந்நிலை குறைந்திருக்கின்றது. கடந்த காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் மக்கள் வாக்களிப்பதைக்கூட தவிர்த்திருக்கின்றார்கள். 2010 ஆம் ஆண்டு கண்டியில் மனோகணேசன் அவர்கள் போட்டியிட்டிருந்தபோது, நாவலப்பிட்டி பகுதியில் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அவருடைய வெற்றி தடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறானதொரு நிலை இரத்தினபுரி மாவட்டத்திலும் ஆங்காங்கே காணப்பட்டிருந்தது. அதேநேரம் தேர்தல் காலங்களில் எமது மக்கள் இங்குள்ள பெரும்பான்மையினத்தவருடன் சேர்ந்து செயற்படும் ஒரு நிலையும் இருக்கின்றது. இவ்வாறான தடைகளே எமது வெற்றிக்கும் தடையாக இருந்ததாக நான் கருதுகின்றேன்.

வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கான தடையை நிவர்த்திசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்? 

2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்நிலைமை குறைவடைந்திருக்கின்றது. மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். வாக்களித்தால்தான் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவு மக்களக்கு பிறந்திருக்கின்றது. அதேபோல் நாங்களும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றோம். நீங்கள் பயமின்றி வெளியில் வாக்களிக்கும்பட்சத்தில் அந்த வாக்குகளுக்கு உரிய பர்துகாப்பை வழங்குவோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எல்லா பிரதேச சபைகளிலும் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கின்றோம். தனிப்பட்ட சின்னத்திலும் ஐக்கிய தேசிய முன்னணியிலும் தலைவர்களை உருவாக்கியிருக்கின்றோம். குறிப்பாக பலாங்கொடை பிரதேசத்தில் அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பிரதிநிகளை உருவாக்கியிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது இறக்குவாணை தேர்தல் தொகுதியில் ஒருவரையும் இரத்தினபுரி பிரதேச சபையிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையும் நிவித்திகலை பிரதேச சபையிலும், கலவானை பிரதேசத்தில் அயகம பிரதேசசபை, கொலன்ன பிரதேச சபை போன்றவற்றிலும் ஒரு பிரதிநிதியை உருவாக்கியிருக்கின்றோம். இரத்தினபுரி மாநகரசபையில் ஒருவரும் பெல்மதுளை பிரதேச சபையில் இரு தமிழ் பிரதிநிதிகள் உருவாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக உதவி செய்திருக்கின்றோம்.

பிரதானமாக இரத்தினபுரி மாவட்ட மக்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அதற்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?

இரத்தினபுரி மாவட்டத்தில் சகல மக்களும் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றார்கள். இது எல்லா மக்களையும் பாதிக்கின்றது. களுகங்கையை அண்மித்த பிரதேசங்கள் நீரேந்து பகுதிகளாகவும் அதிக மழையை பெறுகின்ற பிரதேசங்களாக இருப்பதாலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மழை அதிகமான காலப்பகுதிகளில் இறப்பர் தோட்ட மக்களும் தேயிலை தோட்ட மக்களும் உரிய நாட்கள் வேலை செய்ய முடியாத நிலை இருக்கின்றது. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் முன்னர் இருந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளது. இறப்பர் தோட்டங்களில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது. நான் வசிக்கும் தோட்டப்பகுதியில் முன்னர் 150 க்கும் மேற்பட்டோர் தொழில் செய்யும் நிலை இருந்தபோதும் தற்போது 50 பேரளவிலேயே தொழில் புரிகின்றனர். தோட்டகாணிகளில் இறப்பர், தேயிலைகள் அகற்றப்பட்டு கட்டுபொல், றம்புட்டான் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் வேலைவாய்ப்பு குறைவடைகின்றது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டபுற மக்களையும் கிராமபுற மக்களையும் இணைப்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. இம்மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். நாங்கள் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இங்குள்ள மூவின மக்களும் எங்களை தெரிவு செய்யும்பட்சத்தில் அதற்கு தேவையான சேவைகளை எங்களால் வழங்கமுடியும். 

பெருந்தோட்ட மக்களுக்கு வளப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முக்கிய பிரச்சினையாக ஊதியம் இருக்கின்றது. தற்போதைய தலைவர்கள் 1000 ரூபாவை நோக்கி நகர்கின்றார்கள். இது பொருத்தமானதா?

எல்லா மக்களுடைய சம்பளத்தையும் நிர்ணயம் செய்வதற்கு ஒரு நியதிகள் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த நியதிகளை கொண்டு சம்பளத்தை தீர்மானிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. எனவே 1000 ரூபாதான் சம்பளமா அதற்கு மேலான தொகையா என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். 1000 ரூபா என்பது அரசியலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கே தவிர, 1000 ரூபா என்பதே இறுதியல்ல. எனவே அதற்குரிய நியதிகளை உருவாக்கி சம்பள பிரச்சினையை தீர்க்க வேண்டும். 1000 ரூபா என்பது ஒரு இலக்கு. தொழிலாளர்களுடைய சம்பளமானது, சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கும் செயற்பாட்டுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும். 1000 ரூபா நோக்கி செல்லலாம். அதைவிடவும் அதிகரிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தல் காலத்தில் முன்வைக்கக்கூடிய பிரசாரகொள்கை என்ன?

மக்களுடைய சம்பளம் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினையில் நாங்கள் உரிய தலைமைத்துவத்தை வழங்கவேண்டுமென்பதே என்னுடைய முதலாவது நிலைப்பாடு. சம்பளம் மாத்திரமல்ல எம்முடைய பிரச்சினையல்ல. அவர்களுக்கு ஏனைய உரிமைகள் சலுகைகள் இருக்கின்றன. முன்னர் மக்களுக்கு தேயிலைத்தூள் இலசவமாக வழங்கப்பட்டிருந்தது இன்று அவை வழங்கப்படுவதில்லை. அதுபோன்று பிள்ளைகளுக்கான போ~hக்கு உணவு. தொழில் ஆபத்துக்களின் போது ந~;டஈடுகளை வழங்குவதும் அவசியமாகும். 

இரத்தினபுரி மாவட்டத்தில் மூவின மக்கள் இருந்தாலும் குறிப்பாக, சிங்கள மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்?

இரத்தினபுரி மாவட்ட மூவின மக்களுடனும் நான் பழகியவன். இவர்களுடைய இன்ப துன்பங்களில் கலந்து கொண்டவன். மூவின மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். குறிப்பாக பௌத்த குருமார்களுடன் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன். சிங்கள சகோதரர்களுடன் இணைந்து இயற்கை அனர்த்தங்களின்போது பலருக்கும் கைகொடுத்துள்ளேன். எனவே அம்மக்கள் எம்முடன் இருக்கின்றனர். இரத்தினபுரி மாவட்ட முற்போக்கு சிந்தனை இளைஞர்களுடன் இணைந்து அரசியல் மற்றும் சமூக சேவைகளில் பணியாற்றியுள்ளோம். இவருக்கு வாக்களித்தால் இரத்தினபுரி மாவட்ட சிங்கள மக்களுக்கு குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்களா, அல்லது முன்னனெடுப்பதற்கு ஏதாவது திட்டம் உண்டா?

முஸ்லிம் வேட்பாளர் ஆளும்கட்சியில் இம்முறை நிறுத்தப்படவில்லை. எங்களுடைய ஐக்கிய மக்கள் சக்தியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவருடன் கலந்துரையாடியபோது உங்களுடைய வெற்றிக்கு எங்களுடைய ஆதரவை தருகின்றோம் என்பது அவருடைய கோரிக்கையாக இருந்தது. நான் இஸ்லாமிய மக்களுடனும் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டவன். மக்களிடைய இனவன்முறை ஏற்படும்போதெல்லாம் சர்வமத குழுக்களுடன் இணைந்து அதற்கு முகங்கொடுத்துள்ளேன். வெள்ள அனர்த்தப்பணிகளின் போது அம்மக்களுடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இஸ்லாமிய மக்களின் விழாக்கள் மற்றும் செயற்பாடுகளில் கலந்துகொண்ட நிலையில் எனக்கும் அவர்களுக்கும் நல்ல தொடர்பு இருக்கின்றது. நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் அதிகமான இஸ்லாமிய மாணவர்கள் என்னுடன் தொடர்புடன் இருக்கின்றார்கள். எனவே ஒரு வேட்பாளர் இல்லையென்பதற்காகவோ, அவரால் வெற்றிபெற முடியாது என்பதற்காகவோ எமக்கு வாக்களிக்காமல் எங்களுடைய உறவை பலப்படுத்துவதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்காகவும் இணைந்து செயற்பட வேண்டும்.

கல்வி சமூகமும் இளைஞர்களும் உங்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும். நீங்கள் வெற்றிபெற்றால் அவர்களுக்கு என்ன திட்டத்தை முன்வைப்பீர்கள்?

இரத்தினபுரி மாவட்டத்தில் பல கல்விசார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு ஆசிரியராக அந்த பிரச்சினையை சந்தித்திருக்கின்றேன். எங்களுடைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு முறையான பாடசாலையொன்று காணப்படவில்லை. குறிப்பாக கணித, விஞ்ஞான பிரிவில் உயர்தரத்தை கற்பதற்கான பாடசாலை வசதிகள் இல்லை. அது மிகவும் பெரிய குறைபாடு. இரத்தினபுரி மாவட்டத்தில் 103 தமிழ் பாடசாலைகள் காணப்பட்டாலும் இந்த எந்தவொரு பாடசாலையிலும் விஞ்ஞான பிரிவிலும் கணிதத்துறையிலும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு வசதிவாய்ப்புகள் இல்லை. இது கல்வித்துறையில் மிகப்பெரும் குறைபாடு. இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் கூடிய தமிழ் பாடசாலை உருவாக வேண்டும். எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணமும் அதுதான். கடந்த நல்லாட்சியில் இரத்தினபுரி புதிய  நகரத்தில் பாடசாலைக்கான மூன்று ஏக்கர் காணி கிடைத்திருக்கின்றது. ஆனால் அங்கு பாடசாலையை நிறுவுவதற்கு ஆட்சி மாற்றம் எங்களுக்கு தடையாகவிருந்தது. தரம் 5 இல் சித்தி பெறுபவர்கள் சேர்வதற்கான வசதிகள் இல்லை. 

வசதியானவர்கள் வெளிமாவட்டங்களில் கொண்டு சேர்க்கின்றார்கள். நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரத்தை கற்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக வெளிமாவட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் எங்களுடைய மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எங்களுடைய மாவட்டத்தில் பொருத்தமான பாடசாலையை உருவாக்கினால் நாம் வெளி மாவட்டங்களுக்கு செல்லத் தேவையில்லை. இங்கு பிரதானமாக நான்கு கல்வி வலயங்கள் இருக்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பாடசாலையொன்று குறைந்தபட்சம் உருவாக்கப்பட வேண்டும். இந்த கல்விப்பணியை செய்வதற்கே அரசியலில் பெரும் பணி எனக்கு இருக்கின்றது. ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், வெளிநாட்டு பயிற்சிகள் என்பனவும் அவசியம். ஆசிரியர், அதிபர்களுக்குரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 

கடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது அந்நிலைமை இன்றும் இருக்கின்றதா?

அந்நிலைமை ஏற்கனவே இருந்திருக்கின்றது. கலவானை பிரதேசத்தில் பெரும்பாலும் சிற்றுடைமையாளர்கள் காணப்படுகின்றனர். அங்கு எங்களுடைய மக்கள் ஆங்காங்கு குறைந்தளவில் வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அங்கிருந்து வெளிவருவதென்பதே பெரும் போராட்டம். காவல் இடப்பட்டிருக்கின்றது. யாரும் உள்ளே செல்லமுடியாது. வெளிசெல்லவும் முடியாது. இவை தனியாருக்கு சொந்தமான தோட்டமாகும். இன்றும் நிவித்திகலை, கலவான பிரதேசத்தில் இப்பிரச்சினை முற்றுமுழுதாக நீங்கிவிடவில்லை. இம்மக்களை வெளிகொண்டுவந்து இத்தேர்தலில் வாக்களிக்க வைப்பது வேட்பாளராக என்னுடைய கடமையாகும். அம்மக்களை தைரியப்படுத்தக்கூடிய வகையில் அப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கின்றோம். இரத்தினபுரி பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு கலவான பிரதேசத்தில் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இருக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைபாடுகள் செய்திருக்கின்றார்கள். இருவாரங்களுக்கு முன்னால் பிரதி பொலிஸ்மா அதிபர் எம்மை அழைத்து, பிரச்சினைகள் தொடர்பில் வினவியிருந்தார். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. மக்களும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கவில்லை. 

(க.பிரசன்னா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04