(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா வைரஸ் ஒழிப்பில் இராணுவத்தினரின் பங்களிப்பை யாராலும் நிராகரித்துவிட முடியாது. இராணுவம் இன்றி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்குமா என்பதை நாம் கூற வேண்டியதில்லை. பொது மக்கள் இதற்கு பதிலளிப்பார்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா பரவல் நிலைவரம் உள்ளிட்ட வியடங்கள் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அண்மையில் கொவிட்-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியுடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். கந்தக்காடு புனர்வாழ்வளிப்பு நிலையத்திலுள்ள அனைவரும் தற்போது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று ஆலோசகர்கள் அனைவரதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ளவர்களது பரிசோதனை அறிக்கைகள் மாத்திரமே கிடைக்க வேண்டியுள்ளது. நாளை மாலை இந்த அறிக்கைகள் அனைத்தும் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். புனர்வாழ்வு பெற்றுவருபவர்களை பார்வையிட வருகை தந்த 116 பேருடன் தொடர்புடைய 360 பேருடைய பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. இவர்களில் எவரேனும் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங்காண வேண்டியேற்படும். அதற்கமைய கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய 90 சதவீதமானவர்கள் இனங்காணப்பட்டு பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன.

இது கந்தக்காடு பகுதியை மாத்திரம் உள்ளடக்கியதாகும். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இனங்காணப்பட்ட ஆலோகர்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமே சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்களான இனங்காணப்பட்டுள்ளனர். இதே போன்று இந்த வாரத்தில் மேலும் சில நோயாளர்களை இனங்காணக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

வேண்டியளவு பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்ய முடியுமானால் சிறந்து. சுகாதாரத்துறையினரே இது பற்றி தீர்மானிக்க வேண்டும். புதன்கிழமை வரை 2294 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் கந்தக்காடு சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 700 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 1700 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இராஜாங்கனை பகுதியில் ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டார். இங்கு சுமார் 360 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அதில் ஒருவருக்கு கூட தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை என்பதால் நாம் மீண்டும் மீண்டும் பொது மக்களிடம் வலியுறுத்துகின்றோம். முகக்கவசங்களை கட்டாயம் அணியுங்கள். சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

கந்தக்காடு குறிப்பிட்ட ஒரு பிரதேசம் மாத்திரமேயாகும். ஆனால் மக்கள் செறிந்து வாழும் பல பகுதிகள் நாட்டில் உள்ளன. அலுவலகங்கள் , தொழிற்சாலைகள் என்பவற்றில் முடிந்தளவு சமூக இடைவெளியைப் பேணுவதோடு அநாவசியமாக வெளியிடங்களுச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் குறுகிய காலத்திற்குள் நாட்டில் வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும்.

ஜனாதிபதி , பிரதமருடைய வழிகாட்டல்களுக்கு அமைய சுகாதாரத்துறை , பொலிஸ் மற்றும் ஏனைய படைகளுடன் இணைந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் பெரும்பங்காற்றியுள்ளோம். இதுவரையில் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் இயக்கப்பட்டு வருகின்ற 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மாத்திரமின்றி எதிர்பாராத விதமாக சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் பெரும்பாலான இனங்காணப்பட்டாலும் பின்வாங்காமல் இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். யார் எதைக் கூறினாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக சேவையை நாம் தொடச்சியாக முன்னெடுப்போம் என்றார்.