தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மனித்துள்ள நீதிமன்றம் தற்போது வரை நீதிமன்றை புறக்கணித்து வரும் மூன்று சந்தேகநபர்கள் இல்லாமலேயே அதனை விசாரணை செய்வதாகவும் அறிவித்தது.
ரவிராஜ் கொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றின் இந்த நிலைப்பாட்டை நீதிவான் அறிவித்தார்.
ரவி ராஜ் கொலை விவகாரம் தொடர்பில், சுருக்க முறையற்ற வழக்கு விசாரணை ஒன்றுக்காக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 பேரில் மூவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அம்மூவரையும் உடனடியாக கைது செய்ய திறந்த பிடிவிறாந்து உத்தரவையும் நீதிவான் நிரோஷா நேற்று பிறப்பித்தார். அதன்படி செமி சுரேஷ், சிவகாந்தன் விவேகானந்தன் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தராக இருந்த பெபியன் ரொய்ஸ்டன் டூசைன் ஆகிய மூவரையும் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு குறிப்பிட்ட நீதிவான் சந்தேக நபர்களாக ஆரம்பத்தில் கருதப்பட்ட நாலக மத்தகதீர,அருணுசாந்த ஆகியோரை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வழக்கில் இருந்து விடுவித்தார்.
அதன்படி ஜனவரி நான்காம் திகதி முதல் தலைமறைவாகியுள்ள மூன்று சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக கடற்படை வீரர்களான பிரசாத் ஹெட்டி ஆரச்சி, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த மற்றும் சம்பத் முனசிங்க ஆகிய ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேக
நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குற்றப் பத்திரம் திருத் தப்பட்டு மற்றொருவரும் அதில் சேர்க்கப்பட்டதுடன் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நடராஜா ரவிராஜ் கொலை சம்பந்தமாக சந்தேகநபர்கள் 9 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 7 பேருக்கு எதிராகவே வழக்கு விசாரனைகள் இடம்பெறவுள்ளன.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகிய இருவரும் அடங்குவதுடன் அவர்கள் தற்போது தலைமறைவு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இரண்டு நபர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்றிருந்த கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்ற இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இவர்களுடன் சேர்ந்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியதாக கூறப்படும் டூசைன் என்பவரும் தலைமறைவாகி அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக கூறப்படும் நிலையில் அவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் விடுதலை செய்வது குறித்து சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாத சந்தேகநபர்களுள் ரவிராஜ் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட கடற்படை அதிகாரியும் உள்ளடங்கியிருந்தார்.
சம்பத் முனசிங்க என்ற இந்த கடற்படை அதிகாரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளதாகவும் கூறப்பட்டது. எவ்வாறாயினும் குற்றப் பத்திரிகை திருத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் பட்டியலில் அவர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சந்தேக நபர்களாக ஆரம்பத்தில் கருதப்பட்ட நாலக மத்தகதீர,அருணுசாந்த ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2006-ம் ஆண்டு நவம்பர் 10-ம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM