தமிழகத்தின் சென்னையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் குபேந்திரன். இவரது வீட்டில் நேற்று காலையில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது.

அதை சரி செய்வதற்காக, அதே பகுதியில் வசித்து வந்த ஷாயின்ஷா (32), நாகராஜ் (35) ஆகிய இருவரையும் அழைத்துள்ளார்.

அவர்கள் நேற்று (15.07.2020 மாலை 5 மணியளவில் குபேந்திரன் வீட்டில் இருந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கினர். 

முதலில் இறங்கிய ஷாயின்ஷா வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நாகராஜ் அடுத்ததாக இறங்கினார். அவரும் வெளியே வரவில்லை.

இதையடுத்து, தீயணைப்பு மீட்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே இறங்கி பார்த்தபோது, இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டினப்பாக்கம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில்,

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் சுத்தம் செய்ய நாகராஜும், ஷாயின்ஷாவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

அது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் குபேந்திரனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.