வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புதன்கிழமை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 66 ஆக உயர்வடைந்துள்ளதாக அசாம் மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் 26 மாவட்டங்களில் 3,376 கிராமங்களில் 3.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 44,000 க்கும் அதிகமானேர் பாதுகாப்பான அனர்த்த முகாம்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டும் உள்ளனர்.

அசாம் முழுவதும் அனர்த்த முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தடையின்றி வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகள் படி, மாநிலம் முழுவதும் வீடுகள், வீதிகள், பாலங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன், பல பகுதிகளிலும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரம்மபுத்ரா, பாராலி, கோபிலி, குஷியாரா போன்ற முக்கிய ஆறுகளின் நீர்மட்டமும் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம்.ஆகியவற்றை இந்த வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது.

பூங்காவின் சுமார் 80 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இரண்டு காண்டாமிருகங்கள் மற்றும் ஐந்து காட்டுப்பன்றிகள் உட்பட அறுபத்தாறு விலங்குகள் உயிரிழந்துள்ளன.

மேலும் 170 விலங்குகளை பூங்கா அதிகாரிகள் மீட்டுள்ளனர், இதில் ஒரு வயது பெண் காண்டாமிருக கன்று அதன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா உலகின் ஒரு கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய வாழ்விடமாகும்.

Photo Credit ; twitter