-பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும்.

 பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்முறைகளில் சம்பந்தப்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தின் பங்கு சட்டப்பூர்வமானதாக – நியாயபூர்வமானதாக நோக்கப்படவேண்டுமானால், அதில் வாக்காளர்களும் தேர்தலில் பங்கும் ஈடுபாடும் கொண்ட ஏனைய தரப்பினரும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

தேர்தல் செயன்முறைகளில் இராணுவம் சம்பந்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதை தேர்தல் முகாமைத்துவ அமைப்பின் ஆணையின் கீழ் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும் என்றும் சில நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். தங்களுக்கு ஆணை பிறப்பிக்கும் கட்டமைப்புகள் தொடர்பாக படையினர் முரண்பட்டுக் கொண்டதற்கு 2006 வெனிசுலா தேர்தல் உதாரணமாக கூறப்படுகின்றது. அங்கு தேர்தலின்போது இராணுவம் கடைப்பிடித்திருக்க வேண்டிய நடைமுறையின் பிரகாரம் சிவிலியன் அதிகாரிகளின் உத்தரவை படையினர் எப்போதுமே பின்பற்றவில்லை.

1994 தென்னாபிரிக்க தேர்தலில் இராணுவம் பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட போதிலும், அதன் பயன்பாட்டுக்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் எந்தவொரு விதிமுறையும் சட்டப்படி நிறுவப்படவில்லை. பெருமளவில் வாக்காளர்கள் பதிவுக்கான முயற்சி ஒன்றில் பங்களாதேஷ் இராணுவத்தின் முன்னணி பங்கு நியாயமானது என்று கூறப்பட்டது. ஏனென்றால், அந்த இராணுவத்துக்கு ஒப்பற்ற ஒழுங்கமைப்பு ஆற்றலும் நல்லபெயரும் இருந்தது என்று ஒரு நிபுணர் கூறுகின்றார். 

நைஜீரியாவின் எகிட்டி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலாநிதி அஸீஸ் ஒலானியனும் ஒடாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒலுமுயிவா பாபாடுண்டேயும் ‘‘போர் நடவடிக்கையாக தேர்தல்; தேர்தல்கள் இராணுவ மயமாக்கலும் நைஜீரியாவும்’’ (Elections as Warfare;  Militarization Of Elections and Nigeria) என்ற தொனிப்பொருளில் 2015 வசந்த காலத்தில் சர்வதேச விவகார சங்கத்தின் (International Affairs Forum) முக்கியமான ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்தார்கள். நைஜீரியாவின் எகிட்டி மற்றும் ஒசுன் மாநிலங்களில் தேர்தல்களை நடத்துவதில் கடைப்பிடிக்கப்பட்ட முகாமைத்துவ முறையிலிருந்து வெளிக்கிளம்புகின்ற ஒரு முக்கியமான பிரச்சினை  தேர்தல் செயன்முறைகளின்போது பெருமளவு பாதுகாப்பு படைகளின் பிரசன்னமே என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

தேர்தல்களுக்கு முன்னதாகவும் தேர்தல்களின்போதும் தேர்தல்கள் முடிந்த பிறகு உடனடியாகவும் அந்த இரு மாநிலங்களிலும் மக்களின் வெளிநடமாட்டத்தை தடுப்பதற்காக இராணுவ அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு படையினரின் ஒரு பிரிவு பயன்படுத்தப்பட்டது. அந்த நடவடிக்கை மக்களின் உரிமைகள் மீதும் சுதந்திரத்தின் மீதும் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல்களின்போது சட்டம், ஒழுங்கை பேணுவதற்கு ஆயுதப்படைகளை பயன்படுத்துவதை சட்டரீதியாக நியாயப்படுத்த முடியாது என்பதை அந்த நிபுணர்கள் இருவரும் தமது அறிக்கைகளில் தெரிவித்தார்கள்.

நாட்டின் உள்ளக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொலிஸ் பிரிவுகளுக்கு இருக்கின்ற அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதற்கான ஆற்றலை – குறிப்பாக தேர்தல் செயற்பாடுகளின்போது –  பலப்படுத்துவது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றும் இவ்விருவரும் விதப்புரை செய்தார்கள். அந்த அரசியலமைப்பு கடமை பெருமளவுக்கு சிவில் தன்மை கொண்டதாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இலங்கையின் நிலைப்பாடு; நம்பிக்கையும் நியாயப்பாடும்

விரைவில் தேர்தல்கள் நடக்கவிருக்கின்ற நாடுகள் மத்தியில் இலங்கையும் நியூஸிலாந்தும் தேர்தல்களில் நீண்டகால அனுபவம் குறித்து பெருமைப்பட்டு கொள்ள முடியும்.

உள்ளுராட்சித் தேர்தல்களின்போது வடக்கில் பெருமளவிலும் மற்றைய இடங்களில் குறைந்தளவிலும் இராணுவம் பயன்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்காவில் போலன்றி, இலங்கையில் தேர்தல்கள் ஆணைக்குழு சகல பாதுகாப்பு பணிகளும் பொலிஸினால் செய்யப்பட வேண்டும் என்று உறுதியாக கூறியதுடன் அன்றைய ஜனாதிபதிக்கும் அது அறிவிக்கப்பட்டது. சில தாமதங்களுக்கு பிறகு வாக்களிப்புக்கு ஓரிருநாள் முன்னதாக இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. அந்த வெற்றிடம் பொலிஸாரால் நிரப்பப்பட்டது. தேர்தல்கள்  அமைதியாக நடந்தேறின.

இராணுவத்தை நம்புதல்

மேலும், தேர்தல்களில் இராணுவத்தின் பங்கின் நியாயப்பூர்வத் தன்மை அல்லது சட்டப்பூர்வத் தன்மையில் பெருமளவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களின் போது வெளிப்படையாக தெரியவந்தது. தமிழர்கள் மத்தியில் பாதுகாப்பு படைகள் மீது பரந்தளவில் அவநம்பிக்கையும் பயமும் இருந்தது. பொலிஸார் மீது கூட அவ்வாறுதான். தேர்தல் ஆணைக்குழுவின் வாகனங்களை பொலிஸார் வீதிகளில் மறித்தபோது அதன் தமிழ் சாரதிகளும் சிங்கள சாரதிகளும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதிலிருந்து இது தெரிய வருகிறது. 

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆயுதப்படைகள் மீது தமிழ் மக்கள் அச்சம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அத்துமீறல்கள் இடம்பெறும்போது சிங்களவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில் தமிழர்களுக்கு இருக்கின்ற தயக்கத்தை புரிந்துகொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையாக வடக்கு, கிழக்கில் தேர்தல்களின்போது குழப்பங்கள் ஏற்படக்கூடியவை என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் சிங்கள தேர்தல் அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க துணிச்சல் கொண்ட தமிழ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்கின்றது.

2013 மாகாணசபைத் தேர்தல்களின்போது விஷமத்தனமான அமைச்சர்களினதும் அரசியல்வாதிகளினதும் தலையீடுகளை உறுதியான முறையில் தடுத்தவர் தமிழ் அதிகாரி ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு எதிராக முறைப்பாடுகளை எழுதுவதன் மூலம் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆனால், தேடிப்பார்த்தபோது அந்த முறைப்பாடுகளை செய்தவர்கள் அவற்றில் கொடுக்கப்பட்டிருந்த விலாசங்களில் இருக்கவில்லை. அவர் சீமெந்து பெமிட்டுகளை விற்பனை செய்ததாகவும் ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு பணம் வாங்கியதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யாகிப்போனது.

 ஏனென்றால், எந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தையும் அவர் கொடுத்ததாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் அவரது குடும்பத்தினரின் கடை சீமெந்து விற்பனையுடன் சம்பந்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. 2013இல் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்தியவர்கள் இத்தகைய இயல்பை கொண்டவர்களாக இருந்தார்கள்.

புதிய ஜனாதிபதி, புதிய தேர்தல், 2013 மீள் அனுபவம்

தற்போது புதிய ஜனாதிபதியின் கீழ் நாங்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளோம். நாம் மீண்டும் 2013க்கு திரும்பிக் கொண்டிருக்கின்றோம். அரசாங்க சார்பு வேட்பாளர்களின் நன்மைக்காக அரச வளங்களை திட்டமிட்ட முறையில் தவறாக பயன்படுத்துதலும் தேர்தல் பிரசாரம் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுதலும் ஜனநாயக செயன்முறைகளை சீர் செய்ய இயலாத அளவுக்கு சேதப்படுத்தியிருக்கின்றன என அப்போது தேர்தல் கண்காணிப்பாளர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆட்சியாளர்களுடன் இருப்பவர்களும் அவர்களுக்கு உதவுபவர்களும் சட்டத்துக்கு பயப்படாமல் வாக்குகளை சிதறடிப்பதற்காக செயற்பட்ட அந்த கொடிய நாட்களுக்கு நாம் திரும்பிக்கொண்டிருக்கின்றோம் போல் தெரிகிறது.

ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியான எமது புதிய ஜனாதிபதி கொழும்பில் போக்குவரத்து ஒழுங்குகளை கண்காணிப்பதற்கு கூட இராணுவத்தை பயன்படுத்துகின்றார். அதை பலர் பாராட்டத்தக்கது என்று முன்யோசனை எதுவுமின்றி கூறுகிறார்கள். காரணம், கொழும்பில் கூட இராணுவத்துக்கு வாகனக்காரர்கள் பணிந்து நடக்கிறார்கள். எமது ஜனநாயகத்துக்கு பாதகமான ஒரு வழியை அகல திறந்து விடுகிறோம் என்பதை விளங்கிக்கொள்ளாதவர்களாக அவர்கள் அந்த பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

‘‘ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதை தடுப்பதற்கு ‘சுதந்திரம்;  மக்கள் கூட்டு செயற்திட்டம்’ (Freedom; People's Collective Projects) என்ற சிவில் சமூகக் குழுக்களின் புதிய முயற்சி ஒன்றுக்கு அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான யாவாட் யூசுப் தனது ஆதரவை (ஜூலை 8) முழுமையாக தெரிவித்திருக்கிறார்’’ என்று ஆங்கில தினசரி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே குறிப்பாக வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் துரிதமாக விரிவுபடுத்தப்படுகிறது. வேட்பாளர்களின் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வு அதிகாரிகள் அவர்களின் பயணங்கள், அவர்கள் பயணம் செய்யும் இடங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்ற இடங்கள் போன்ற விபரங்களை கேட்கிறார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா பொதுக்கூட்டம் ஒன்றில் யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கு முறையிட்டார். சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் ஒலிபெருக்கி ஒன்றை பயன்படுத்துவதானால் மாத்திரமே பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். ஆனால், தமிழ் வேட்பாளர்கள் தங்களை விசாரணை செய்கின்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு இதை கூறுவதற்கு பயப்படுகிறார்கள்.

புலனாய்வு அதிகாரிகள் தமிழ் வேட்பாளர்களுக்கு இவ்வாறு அடாவடித்தனமாக தொல்லை கொடுக்கின்ற அதேவேளை, இராணுவம் எல்லா இடங்களிலும் வீதிச் சோதனை சாவடிகளை அமைத்திருக்கிறது. எமது தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெருமளவு அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் கூட இராணுவத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

கிளிநொச்சிக்கான எமது தேர்தல் அலுவலர் ஜூலை 5ஆம் திகதி படை வீரர்களினால் 2 தடவைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அவரின் மோட்டார் சைக்கிளின் பின்பெட்டியை திறக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். இது குறித்து அவர் நண்பர்களுக்கு கூறி கவலைப்பட்டுக்கொண்டார். ஆனால், நிருபர்கள் இது குறித்து கேட்டபோது, பயத்தில் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். கிளிநொச்சி - மட்டக்களப்பு வீதியில் 2020 ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமை இரு தடவைகள் இந்த அலுவலருக்கு அத்தகைய அனுபவம் ஏற்பட்டதை இரு வட்டாரங்களின் மூலம் நான் உறுதி செய்து கொண்டேன்.

இவ்வாறுதான் தமிழ் அதிகாரிகளை பயம் ஆட்கொள்கிறது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும்போது பல தமிழ் அதிகாரிகள் சான்றுகள் இல்லை என்பது போன்ற வெற்றுச்சாட்டுகளை கூறி அனுப்பிவிடுவார்கள். சான்றுகளை வழங்கும்போது முகநூல் பதிவுகள் பற்றி நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிடுகிறார்கள். தேர்தல் பிரசுரங்களை ஆலயங்களில் வைத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வது தனிப்பட்ட வழிபாடு என்றும் கூறி விடுகிறார்கள்.

எமது நிர்வாக ஒழுங்கு முறையின் நேர்மை தேர்தல் தகவல் வலையமைப்பின் முல்லைத்தீவு அலுவலரான கே. காண்டீபன் போன்ற எமது துணிச்சலான அதிகாரிகளிலேயே தங்கியிருக்கின்றது. அவர் தானே நேரடியாகச் சென்று புகைப்படங்களை எடுத்து முறைப்பாடுகளை பதிவு செய்கிறார். அந்த வலையமைப்பின் மன்னார் அலுவலரான ஜே.ஜெனிட்டனும் அவ்வாறுதான் செயற்படுகிறார். அன்றொருநாள் இரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக தன்னை விளம்பரப்படுத்தும் சிறிய பொக்கெட் அட்டைகளை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தனது வாகனத்தில் கொண்டு சென்றார். அவை சட்டப்பூர்வமானவை. சுவரொட்டிகள் மாத்திரமே தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இராணுவம் அவரது வாகனத்தை மறித்து அந்த அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.

நிர்மலநாதன் துணிச்சல் கொண்டவர். அவர் இராணுவ வீரர்களை பல உயர் பதவியிலுள்ள தமிழர்கள் அழைப்பதைப்போன்று ‘சேர்’ என்று அழைத்து விலகிச் செல்லவில்லை. அவர் ஜெனிட்டனை தொலைபேசியில் அழைத்தார். சம்பவ இடத்துக்கு வந்த அவர் இது பொலிஸாரின் பணியே தவிர இராணுவத்தினருடையது அல்ல என்று படைவீரர்களிடம் கூறினார். பொலிஸார் அதில் தலையிட்டு சட்டவிரோதமாக பறிமுதல் செய்த அட்டைகளை திருப்பித் தருமாறு கேட்டனர். ஜெனிட்டனின் பணி பாராட்டுக்குரியது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் கூறினார்.

அதிகரிக்கும் சட்டமீறல்கள்

ஜூன் 17 புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்தது. இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது. அதற்கு பதிலாக பொலிஸாரே பயன்படுத்தப்படுவர் என்றும் கொவிட்- 19 மருத்துவ வழிகாட்டல்கள் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இரண்டு உறுதிமொழிகளை வழங்கினார். ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை. அந்த கூட்ட குறிப்புகள் கூட எமக்கு கிடைக்கப்பெறவில்லை. இது மீண்டும் 2006 வெனிசுலாவா? படைவீரர்கள் எமது சிவிலியன் ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு பணிந்து நடக்கவில்லையா?

இந்த நிலைவரங்களை எல்லாம் தங்களுக்கு வாய்ப்பானதாக எடுத்துக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் செயற்படுகின்ற அரசியல் கட்சிகள் முறைகேடுகளை தொடர்கின்றன. தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒருசில மாதங்களே இருந்த நிலையில், எமது யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என். வேதநாயகன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஓய்வு பெறுவதற்கும் கூட சொற்பகாலமே இருந்தது. இடமாற்ற உத்தரவை நிராகரித்த அவர் தனது நேர்மையை காப்பாற்றுவதற்காக பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். உகந்த காரணமின்றி இந்த தேர்தலுக்கு முன்னதாக சுமார் 10 அரசாங்க அதிபர்கள் இடமாற்றப்பட்டார்கள். 

முக்கியமான மாவட்டம் ஒன்றில் முறைப்பாடுகள் அலட்சியம் செய்யப்பட்டன. கொவிட் - 19 பாதுகாப்புக்காக பொருட்கள் வழங்கப்பட்டபோது முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி. ஒருவர் அவற்றை தனது அன்பளிப்புகள் என விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்றார். இது குறித்து விசாரணைகள் இடம்பெற்றன. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்  ஒருவர் உதவி வழங்குனர்களுக்கு அனுப்புவதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை உறுதிப்படுத்தினார். எமது விசாரணை குழுவிடம்  அவர் தனக்கு தெரிந்த வரையில் பல்வேறு மட்டங்களில் உள்ள தனது அதிகாரிகள் சகல விடயங்களையும் நேர்மையாக செய்வதாக உறுதிப்படுத்துவதாக கூறினார்.

அதற்கு பிறகு அரசாங்க அதிபரினால் பொறுப்பு கொடுக்கப்பட்ட அவரது அதிகாரிகள் உதவி வழங்குனர்களை ஏமாற்றிவிட்டதாக விசாரணைக்குழு எவ்வாறு அதன் அறிக்கையில் கூறமுடியும், இது அவரது நேர்மைக்கு சவால் என்று விசாரணை ஒன்றில் எவராவது கூறுவார்களா? தனக்கெதிரான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு மூடி மறைப்பு இடம்பெறாத பட்சத்தில் அவரால் எவ்வாறு அத்தகைய அறிவிப்பொன்றை செய்ய முடியும்? ஒருவேலையை செய்வதற்காக பலம்பொருந்திய அதிகார மட்டத்தினால் அனுப்பப்பட்டவர் அந்த அதிகாரி. அவரை எதிர்க்க யார் துணிச்சல் கொள்வார்கள்? 

சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஒருவர் விளக்கியதுபோன்று, ‘‘எம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எமது பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கு அதனை பயன்படுத்துகின்றோம். நாம் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டால் கார் இல்லாமல் எமது உலகம் தலைகீழாகிவிடும். அதனால் நாம் அரசியல் உத்தரவுகளுக்கு இணங்கி நடக்கின்றோம். எமது விசாரணைகள் அந்த உயர்மட்டத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன 

தேர்தல்களை நடத்துவதற்கு வழங்கப்படும் பணம் கையாடப்படுகின்ற அளவுக்கு  நிர்வாகமுறை திருத்தியமைக்க முடியாத வகையில் ஊழல்தனமானதாகி விட்டது. இது எனக்கு அண்மையில் கிடைத்த முறைப்பாடு.

‘‘தமிழ் நாயே எனது நாட்டை விட்டு வெளியேறு; நான் ஒரு இலங்கையன்’ என்று கூறும் கடிதம ஒன்று எனக்கு தபாலில் வந்தது. எம்மை வாக்களிக்கவிடாமல் தடுப்பதும் எமது பணியை செய்யவிடாமல் தடுப்பதுமே இதன் நோக்கமாகும். காடைத்தனத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு நாம் வாக்களிக்கக்கூடாது.

(கட்டுரையாளர்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினர். இங்கு தெரிவிக்கப்பட்டவை அவரது சொந்த அபிப்பிராயங்களே தவிர ஆணைக்குழுவின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)