(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தல் தொடர்பான சுகாதார பரிந்துரைகளை வர்த்தமானிப்படுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சு தொடர்ந்தும் மெளனம் காத்துவருகின்றமை கவலையளிக்கின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கொராேனா தொற்று மீண்டும் தலைதூக்கி வருகின்றதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்து வருவதால் சுகாதார வழிகாட்டல்களை பிற்பற்றி செயற்படுவது மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பரிந்துரை அடங்கிய அறிக்கை சுகாதார அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்திருந்தது.

இருந்தபோதும் குறித்த சுகாதார வழிகாட்டல் அடங்கிய பரிந்துரை வர்த்தமானிப்படுத்தி வெளியிட்டாலே அதற்கு சட்ட அங்கிகாரம் கிடைக்கின்றது. அது இதுவரை இடம்பெறாமல் இருப்பதால் சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி இருக்கின்றனர்.

என்றாலும் சுகாதார அமைச்சு இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் முன்வைக்காமல் தொடர்ந்தும் மெளனம் காத்துவருகின்றமை கவலையளிக்கின்றது. அத்துடன் இந்த விடயம் தொடர்பாக பெவ்ரல் அமைப்பு பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியபோதும் அரசாங்கம் அது குறித்து போதிய கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. 

தேர்தல் தொடர்பான சுகாதார ஏற்பாடுகள் அடங்கிய வர்த்தமானி பத்திரிகையை வெளியிட்டு, அதற்கு சட்டரீதியிலான அங்கிகாரத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் நாங்கள் அறிவித்திருக்கின்றோம். அதனால் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இதுதொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தி, வர்த்தமானிப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும். 

அத்துடன் தற்போது பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றன. ஆனால்  எந்தவொரு அரசியல் கட்சியும் தமது கொள்கை பிரகடனத்தை இதுவரை வெளியிடவில்லை. தமது எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் கடந்தகால செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றதே தவிர, மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்வைத்து பேசுவதை பிரசார மேடைகளில் காணமுடியவில்லை என்றார்.