நாம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைப்பது சரியல்ல. ஏனெனில் இது அதனை விடவும் மோசமான நிலையாகும். அரசின் கட்டமைப்பில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் பிரதமரையும் அமைச்சரவையையும் கூட உள்ளடக்காத ஜனாதிபதி மற்றும் விசேட ஜனாதிபதி செயலணிகளாலேயே நீங்கள் ஆளப்படுகிறீர்கள். நாட்டிற்கு நிகழக்கூடிய மிகவும் கேடான விடயம் இதுவாகும் என்று ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே தயான் ஜயதிலக இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்போது பிரதமரையும், அமைச்சரவை அமைச்சர்களையும் தவிர்த்து முன்னாள் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கியதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டிருக்கும் விசேட செயலணிகளின் ஆபத்தான தன்மை குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதேவேளை அரசியலமைப்பின் 19 மற்றும் 13 ஆவது திருத்தங்களை இல்லாதொழிப்பதற்கான முன்னெடுப்புக்களுக்கு எதிராக எழும் எதிர்ப்புக்குரல்கள் தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர், 'தற்போது நாட்டின் உயர்மட்ட நிர்வாகம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அநேக உறுப்பினர்களின் பங்களிப்பைக் கொண்டதாக இருக்கிறது. மத்தியில் மிக உயர்வாக அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளமையையே இது காண்பிக்கிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் 19 ஆவது திருத்தத்தையோ அல்லது 13 ஆவது திருத்தத்தையோ நீக்கினால் என்ன நடக்கும்?' என்று கேள்வி எழுப்பினார்.

'நாம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைப்பது சரியல்ல. ஏனெனில் இது அதனை விடவும் மோசமான நிலையாகும். அரசின் கட்டமைப்பில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் பிரதமரையும் அமைச்சரவையையும் கூட உள்ளடக்காத ஜனாதிபதி மற்றும் விசேட ஜனாதிபதி செயலணிகளாலேயே நீங்கள் ஆளப்படுகிறீர்கள். நாட்டிற்கு நிகழக்கூடிய மிகவும் கேடான விடயம் இதுவாகும். 

ஏற்கனவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடனான செயலணிகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரின் நிலவுகை என்பன காணப்படும் நிலையில், அதேதரப்பினருக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெற்றால் நிலைமை எத்தகையதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறிருக்கையில் பிறருக்கான வாய்ப்புக்களும், இடைவெளியும் எவ்வாறு வழங்கப்படும்?' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.