(செ.தேன்மொழி)

மாத்தறை - ஹக்மன பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் மீது ரிப்பர் வாகனத்தை மோதச்செய்து , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை உயிரிழக்கச் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட  சாரதியை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹக்மன - கோங்கல சோதனைச் சாவடியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் மீது ரிப்பர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

இதன்போது வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடை மாலித்த வித்தாரண என்ற கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்ததுடன் , சார்ஜெனட்கள் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளின் போது ரிப்பர் வாகனத்தின் சாரதி ஏற்கனவே பொலிஸ் சோதைச் சாவடியில் வழங்கப்பட்ட சமிஞ்சையை மதிக்காது வந்துள்ளதாகவும் , பின்னர் அது தொடர்பில் ஹக்மன - கோங்கல சோதனைச் சாவடியில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இந்த ரிப்பர் வாகனத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது பொலிஸார் ரிப்பர் வாகனத்தின் சாரதியை அபயகரமாக வாகனத்தை செலுத்தியமைக்காக எச்சரித்துள்ளதுடன்,  சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்து கொண்டு, தற்காலிகாக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி அவரை அனுப்பியுள்ளனர்.

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் பொலிஸ் சோதனைச் சாவடியில் பக்கம் வந்துள்ள ரிப்பர் கடையிலிருந்த பொலிஸார் மூன்று பேரையும் மோதிவிட்டு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சாரதியால் கைவிடப்பட்ட ரிப்பரை பொலிஸார் மீட்டதுடன் , சந்தேக நபரான சாரதியையும் கைது செய்திருந்தனர்.

ஹூங்கம - ரணால பகுதியில் கைது செய்யப்பட்ட சாரதி இன்று புதன்கிழமை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் , நீதிவான் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.